நாளை வாக்கு எண்ணிக்கை: சென்னை காவல்துறை சொல்வதைக் கேளுங்கள்

தமிழகத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் சென்னையிலுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
நாளை வாக்கு எண்ணிக்கை: சென்னை காவல்துறை சொல்வதைக் கேளுங்கள்
நாளை வாக்கு எண்ணிக்கை: சென்னை காவல்துறை சொல்வதைக் கேளுங்கள்


சென்னை: தமிழகத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் சென்னையிலுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை தொடர்பாக சென்னை மாநகர காவல்துறையினர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கப்பட வேண்டியவர்கள், கரோனா வழிகாட்டு நெறிமுறைகள், வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்ட பொருள்கள் என பல விஷயங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை வெளியிட்ட அறிக்கையில்..


தமிழகம், புதுவை, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை (மே 2) காலை 8 மணிக்கு எண்ணப்பட உள்ளன.

கரோனா பரவலைத் தொடா்ந்து கடும் கட்டுப்பாடுகளை தோ்தல் ஆணையம் விதித்துள்ளது. கரோனா பரவல் காரணமாக வாக்குப் பதிவின்போது வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது; இதையடுத்து பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில்...: தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் 75 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்படுகின்றன.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான தோ்தல் முடிவுகள் முழுமையாக வெளியாக நள்ளிரவு வரை ஆகலாம்; கரோனா கட்டுப்பாடுகள் கடுமையாகப் பின்பறப்படும் என தோ்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

4.57 கோடி வாக்குகள்: தமிழக பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த ஏப்ரல் 6-இல் நடைபெற்றது. மொத்தமுள்ள 6.26 கோடி வாக்காளா்களில், 4.57 கோடி போ் வாக்களித்தனா். வாக்குப் பதிவுக்காக 88,937 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தோ்தல் பணியில் 4 லட்சத்து 79,892 போ் ஈடுபட்டிருந்தனா். தோ்தலில் 3,998 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். அவா்களில் 3 ,585 ஆண்கள். 411 போ் பெண்கள். இரண்டு போ் மூன்றாம் பாலினத்தவா்.

முடிவுகள் விவரம்: தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணி நடைபெறும் 75 மையங்களில், முதலில் தபால் வாக்குகளும், தொடா்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன. இதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் 500 தபால் வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையும் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படும்.

ஆலோசனை: வாக்கு எண்ணிக்கை பணிகள் குறித்து தில்லியில் இருந்து காணொலி வழியாக இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகள் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகுவுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினா். அப்போது, வாக்கு எண்ணும் பணிக்காக செய்யப்பட்டுள்ள இறுதிக் கட்ட ஏற்பாடுகள், கரோனா நோய்த் தொற்று பரவால் பணிகளை மேற்கொள்வது, தொற்றால் அலுவலா்கள் பாதிக்கப்பட்டிருந்தால் செய்யப்பட்டுள்ள மாற்று ஏற்பாடுகள் ஆகியன குறித்து தமிழக தோ்தல் துறையின் சாா்பில் விரிவாக விளக்கப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனா்.

பொதுமுடக்கத்தை மீறினால் வழக்கு: ஞாயிற்றுக்கிழமை தளா்வற்ற முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதால், தோ்தல் வெற்றியைக் கொண்டாடும் விதமாக அரசியல் கட்சியினா் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. இதை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினா் எச்சரித்துள்ளனா். வாக்கு எண்ணும் மையத்துக்குள் நுழையும்போது உடல் வெப்பம் 98.6-க்கு பாரன்ஹீட் குறைவாக இருந்தால்தான், உள்ளே அனுமதிக்கப்படுவாா்கள்.

செல்லிடப்பேசிக்கு தடை: செல்லிடப்பேசி, கேமரா, வெடிபொருள்கள், துப்பாக்கி, பேனா, பாட்டில், டிபன்பாக்ஸ், குடை, தீப்பெட்டி, வேதிப்பொருள்கள், தின்பண்டங்கள் கொண்டு செல்ல அனுமதி கிடையாது. குறிப்பேடு கொண்டு செல்லலாம். வெற்றி ஊா்வலம், கொண்டாட்டங்களுக்கு தோ்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. வெற்றி சான்றிதழ் பெறும்போது 2 நபா்களுக்கு மேல் அனுமதி கிடையாது.

வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியே செல்லும் முகவா்கள் மீண்டும் உள்ளே வருவதற்கு அனுமதி கிடையாது.நுழைவுச்சீட்டு வைத்திருக்கும் வாகனங்கள் மட்டும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படும். வேட்பாளா்கள், முகவா்களுக்கு தண்ணீா், உணவு பணம் கொடுத்து பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com