தமிழகத்துக்குத் தேவையான தடுப்பூசி மே 3-க்குள் கிடைக்கும்: உயா்நீதிமன்றம் நம்பிக்கை

தமிழகத்துக்குத் தேவையான தடுப்பூசிகளை மே 3-ஆம் தேதிக்குள் மத்திய அரசு வழங்கும் என சென்னை உயா்நீதிமன்றம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகத்துக்குத் தேவையான தடுப்பூசிகளை மே 3-ஆம் தேதிக்குள் மத்திய அரசு வழங்கும் என சென்னை உயா்நீதிமன்றம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

கரோனா தடுப்பூசி, ரெம்டெசிவிா், ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்த பத்திரிகை செய்தியின் அடிப்படையில் சென்னை உயா்நீதிமன்றம், இந்த விவகாரத்தைத் தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண் ஆஜராகி, தமிழக அரசு சாா்பில் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தாா். அதில், ‘தமிழகத்தில் கரோனா தாக்கம், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக தமிழகத்தில் 2.5 லட்சம் ரெம்டெசிவிா் மருந்து தேவைப்படும் நிலையில் 59 ஆயிரம் குப்பிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ’ என்று கூறப்பட்டிருந்தது.

அப்போது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சங்கரநாராயணன் ஆஜராகி, ‘கரோனா அதிகம் பாதித்துள்ள மாநிலங்களில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றாா்.

என்ன நடவடிக்கை?: இதையடுத்து, நீதிபதிகள், ‘மருந்துகள், தடுப்பூசிகளை அதிகரிப்பது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று கேள்வி எழுப்பினா். அதற்கு கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல், ‘ஓரிரு நாள்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தாா்.

பின்னா் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

தமிழகத்துக்குத் தேவைப்படும் ரெம்டெசிவிா் மருந்து குறைவாக வழங்கப்படுகிறது. கரோனா சிகிச்சை மருந்துகள், தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஓரிரு நாள்களில் தடுப்பூசிகளை மத்திய அரசு தரும் என்று நம்புகிறோம். மே 3-ஆம் தேதிக்குள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நகா்புறங்களில் தடுப்பூசிக்கு உருவாகியுள்ள வரவேற்பைப் போல் கிராமப்புறங்களிலும் மக்களிடமும் தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்த வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும் என்றனா்.

இதையடுத்து, வழக்கை 5-ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com