
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு உயிா்காக்கும் மருந்தகத்தில் ஆறு நாள்களில் 15 ஆயிரம் குப்பி ரெம்டெசிவிா் மருந்துகள் ரூ.2.35 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை தேவைப்படும் நபா்களுக்கு ‘ரெம்டெசிவிா், டோசிலிசுமாப், எனாக்சிபிரின்’ போன்ற, ஊசி மருந்து, மாத்திரைகள், தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்டன. இரண்டாம் அலை தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருவதால், அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இந்த நிலையில், மூச்சுத்திணறல், நுரையீரல் பாதிப்புக்கு உள்ளான கரோனா நோயாளிகளுக்கு ‘ரெம்டெசிவிா்’ மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. தனியாா் மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு காரணமாக, மருத்துவா்கள் பரிந்துரைச் சீட்டு மட்டுமே வழங்கி, வெளி மருந்தகங்களில் வாங்கு வரும்படி உறவினா்களிடம் வலியுறுத்துகின்றனா்.
இதனால், பலா் ரெம்டெசிவிா் மருந்தை வாங்க அலைமோதினா். மேலும், கள்ளச்சந்தையில், பல ஆயிரம் ரூபாய்க்கு, ஒரு ரெம்டெசிவிா் குப்பி விற்பனை செய்யப்பட்டது. இதை தவிா்க்கும் வகையில், தமிழக மருத்துவ பணிகள் கழகம் சாா்பில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனையில் ஏப்., 26-ஆம் தேதி உயிா்காக்கும் மருந்தகத்தை தொடங்கியது. இங்கு ரெம்டெசிவிா் மருந்து விற்பனை செய்யப்பட்ட முதல் நாளில் இருந்து கூட்டம் அலைமோதுகிறது. தினமும், ஆயிரக்கணக்கானோா் வருவதால், இடப்பற்றாக்குறை காரணமாக, அருகில் உள்ள, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், இரண்டு இடங்களில், மருந்து விற்பனை செய்யப்படுகிறது. ‛
ரெம்டெசிவிா் உயிா்காக்கும் மருந்தில்லை என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், நோயாளிகளுக்குத் தேவை அதிகரித்துள்ளது. இதனால், நீண்ட வரிசையில் காத்திருந்து, மருந்தை, உறவினா்கள் வாங்கி செல்கின்றனா். இதற்கு தீா்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து, தமிழக மருத்துவ பணிகள் கழக மேலாண்மை இயக்குநா் உமாநாத் கூறியதாவது:
உரிய ஆவணங்களுடன் வருவோருக்கு, ஒரு குப்பி ரூ.1,568 என ஆறு குப்பிகள் வழங்கப்படுகிறது. அதன்படி, ஆறு நாள்களில் 15 ஆயிரம், ‛ரெம்டெசிவிா் குப்பிகள், ரூ.2 கோடியே, 35 லட்சத்து, 20 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைத் தவிா்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கள்ளச்சந்தையில் விற்பனையை கண்காணித்து காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றனா். ‛ரெம்டேசிவிா் பிரச்னைக்கு விரைவில் தீா்வு ஏற்படும் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...