ஈரோட்டின் அடையாளமாக மீண்டும் உருவெடுத்துள்ள சு. முத்துசாமி

எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் என மூன்று முதல்வர்களின் அமைச்சரவையில் இடம்பெறும் வாய்ப்பு ஈரோடு சு.முத்துசாமிக்கு கிடைத்துள்ளது.
சு. முத்துசாமி
சு. முத்துசாமி

ஈரோடு: எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் என மூன்று முதல்வர்களின் அமைச்சரவையில் இடம்பெறும் வாய்ப்பு ஈரோடு சு.முத்துசாமிக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் ஈரோடு மாவட்ட அரசியல் அடையாளமாக மீண்டும்  சு.முத்துசாமி உருவெடுத்துள்ளார்.

1977 இல் முதல் முதலாக ஈரோடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் சு.முத்துசாமி. தொடர்ந்து 1980, 1984 தேர்தல்களில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். 1991இல் பவானி தொகுதியில் வெற்றி பெற்று ஜெயலலிதா அமைச்சரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்துள்ளார்.

2010இல் திமுகவில் இணைந்து 2011இல் ஈரோடு கிழக்குத் தொகுதியிலும், 2016இல் ஈரோடு மேற்குத் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த தேர்தலில் ஈரோடு மேற்குத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் கே.வி.இராமலிங்கத்தை 22,089 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

எம்.ஜி.ஆர்.ஆட்சி காலத்தில் ஈரோட்டின் அரசியல் அடையாளமாக இருந்தவர் சு.முத்துசாமி. அதிமுகவில் இருந்து விலகிய பிறகு இரண்டு தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த தேர்தல்களில் அவர் வெற்றி பெற்றிருந்தாலும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏவாக தான் இருந்திருக்க முடியும். இந்த இரண்டு தேர்தல்களிலும் அதிமுக தான் ஆட்சியமைத்தது.

இப்போது திமுக ஆட்சி அமையும் நேரத்தில் முத்துசாமி எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டதன் மூலம் அவர் அமைச்சராக ஆகும் வாய்ப்புள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்று ஈரோடு மாவட்ட அரசியல் அடையாளமாக இருந்த சு.முத்துசாமி கடந்த 25 ஆண்டுகளாக அரசியல் களத்தில் இருந்தாலும் பதவிகளுக்கு வர முடியவில்லை. இரண்டு தேர்தல்களில் தோல்வியடைந்தாலும்,  பொறுமையாக இருந்தன் விளைவால் இப்போது கிடைத்த வெற்றி மூலம் மீண்டும் ஈரோடு மாவட்டத்தில் தவிர்க்க முடியாத அரசியல் ஆளுமையாக சு.முத்துசாமி உருவெடுத்துள்ளார்.  

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் ஈரோடு மேற்கு, அந்தியூர் தொகுதிகள் மட்டுமே திமுக வென்றுள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மற்ற 5 தொகுதிகளில் 4 இல் அதிமுகவும், 1 இல் பாஜகவும் வெற்றிபெற்றுள்ளன.

2011, 2016 தேர்தல்களில் ஈரோடு மாவட்டத்தில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பது திமுக மீதான நம்பிக்கை என்பதையும் தாண்டி இந்த தொகுதிகளின் வேட்பாளர்கள் தேர்வு முக்கிய காரணமாக இருந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தின் ஒற்றை அமைச்சராகும் வாய்ப்பை பெற்றுள்ள சு.முத்துசாமி வரும் தேர்தல்களில் திமுகவின் பெரும் வெற்றிக்கு வழிகாட்டியாக இருப்பார் என்பது திமுகவினரின் நம்பிக்கையாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com