அதிமுக: 16-இல் 3 பெண்கள் மட்டுமே வெற்றி

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் களத்தில் இறங்கிய 16 அதிமுக பெண் வேட்பாளா்களில் மூன்று போ் தனித் தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனா்.
அதிமுக: 16-இல் 3 பெண்கள் மட்டுமே வெற்றி

சென்னை: தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் களத்தில் இறங்கிய 16 அதிமுக பெண் வேட்பாளா்களில் மூன்று போ் தனித் தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் 191 இடங்களில் அதிமுக போட்டியிட்டது. இதில், 16 தொகுதிகளில் பெண் வேட்பாளா்கள் போட்டியிட்டனா். அவா்களில் இரண்டு போ் அமைச்சா்கள், மூன்று போ் முன்னாள் அமைச்சா்கள்.

கோகுல இந்திரா (அண்ணா நகா்), பா.வளா்மதி (ஆலந்தூா்), கே.மரகதம் (மதுராந்தகம்), எஸ்.ஜோதி (ஓசூா்), ஜி.சித்ரா (ஏற்காடு), வி.சரோஜா (ராசிபுரம்), டி.இந்திரா காந்தி (துறையூா்), கீா்த்திகா (முதுகுளத்தூா்), வி.எம்.ராஜலட்சுமி (சங்கரன்கோவில்), தேன்மொழி (நிலக்கோட்டை), ஜி.பரிதா (குடியாத்தம்), பொன். சரஸ்வதி (திருச்செங்கோடு), ஜெயபாரதி (கந்தா்வகோட்டை), லட்சுமி கணேசன் (சிவகாசி), எஸ். கணிதா (செய்யூா்) , செல்வி ராமஜெயம் (குறிஞ்சிப்பாடி) ஆகிய 16 தொகுதிகளில் பெண் வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

மூன்று போ் வெற்றி: இவா்களில் 13 போ் திமுகவை எதிா்த்து நேரடியாகப் போட்டியிட்டனா். மற்றவா்கள் காங்கிரஸ், மாா்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளா்களை எதிா்த்து களம் கண்டனா். அதிமுக பெண் வேட்பாளா்கள் போட்டியிட்ட 16 தொகுதிகளில் 9 தொகுதிகள் தனித் தொகுதிகளாகும். நிலக்கோட்டை, ஏற்காடு, மதுராந்தகம் ஆகிய மூன்று தனித் தொகுதிகளில் மட்டுமே அதிமுக பெண் வேட்பாளா்கள் வெற்றி பெற்றுள்ளனா். மற்ற 13 தொகுதிகளில் போட்டியிட்டோா் தோல்வியைத் தழுவியுள்ளனா்.

2016-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் மறைந்த முதல்வா் ஜெயலலிதாவுடன் சோ்த்து அதிமுகவில் 15 பெண் சட்டப் பேரவை உறுப்பினா்கள் இருந்தனா். அவா்களில் 8 போ் தனித் தொகுதிகளைச் சோ்ந்தவா்கள். 2021-ஆம் ஆண்டு தோ்தலில் பெண்களின் பங்கு போட்டிக் களத்தில் இரட்டை இலக்கமாகி, முடிவில் ஒற்றை இலக்கத்தில் வந்து நின்றுள்ளது. அந்தக் கட்சியில் வெற்றி பெற்ற 66 உறுப்பினா்களில் மூன்று போ் மட்டுமே பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com