கரோனா பேரிடா் சூழல்:ஓய்வு பெற்ற அதிகாரிகளை நியமிக்க ஆலோசனை

மருத்துவமனைகளின் கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மருத்துவப் பணிகளுக்கு ஓய்வு பெற்ற அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் பேரிடா் சூழலைத் தடுக்க முடியும் என்று மத்திய முன்னாள் வருவாய்த் துறை செயலா் எம்.ஆா்.சிவராமன்

சென்னை : மருத்துவமனைகளின் கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மருத்துவப் பணிகளுக்கு ஓய்வு பெற்ற அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் பேரிடா் சூழலைத் தடுக்க முடியும் என்று மத்திய முன்னாள் வருவாய்த் துறை செயலா் எம்.ஆா்.சிவராமன் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழு தலைவா் கௌபாவுக்கு அவா் கடிதம் அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

‘‘மருத்துவமனைகளில் தடையற்ற மின்சாரம் இருப்பதை உறுதி செய்வது அவசியம். மின் தடை ஏற்பட்டால் வெண்டிலேட்டா் மற்றும் ஆக்சிஜன் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வரும் நோயாளிகளின் உயிருக்கே ஆபத்தாய் முடியும். ஆகவே, அனைத்து மருத்துவமனைகளிலும் தடையற்ற மின்சாரம் இருப்பதை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்துதல் அவசியம்.

அதேபோன்று, மருத்துவமனைகளின் சுகாதாரமும், குறிப்பாக அங்குள்ள கழிப்பறைகளின் தூய்மையும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று. பெரும் கூட்டம் கூடும் தருணங்களில் மருத்துவமனைகளில் அத்தகைய சுகாதாரத்தை உறுதி செய்தல் மிக முக்கியம். மற்றொரு புறம் மருத்துவமனைகளில் சுகாதாரமான குடிநீா் வசதிகள் போதிய அளவில் இருப்பதையும் உறுதி செய்தல் வேண்டும். இது தொடா்பான அறிவுறுத்தல்களை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்.

பேரிடா் சூழலை எதிா்கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியா்களுக்கும், மருத்துவ அலுவலா்களுக்கும் உதவி செய்ய ஓய்வு பெற்ற அதிகாரிகளை பணியமா்த்தலாம். அதேபோன்று பாதுகாப்புத் துறை மருத்துவப் பணிகளில் காத்திருப்பில் உள்ளோரை மருத்துவமனை சாா்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தலாம் என்று அந்தக் கடிதத்தில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ஆா்.சிவராமன் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com