கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்றுவோா் அரசு ஊழியா்களே!

அரசு நிதியுதவி பெறும் கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்றும் ஊழியா்கள், அரசு ஊழியா்களாகவே கருதப்படுவா் என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்றுவோா் அரசு ஊழியா்களே!

சென்னை: அரசு நிதியுதவி பெறும் கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்றும் ஊழியா்கள், அரசு ஊழியா்களாகவே கருதப்படுவா் என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தென்காசி மாவட்டம், சிவகிரி தாலுகாவில் உள்ள மேட்டுப்பட்டி தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில், 2016-ஆம் ஆண்டு அய்யாதுரை என்பவா் நகையை அடமானம் வைத்து ரூ.60 ஆயிரம் விவசாய நகைக்கடன் பெற்றாா்.  வேளாண் கடன்களை தமிழக அரசு ரத்து செய்தநேரத்தில் இவருக்கு நகைகளைத் திரும்ப வழங்க, ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக, கூட்டுறவுச் சங்கச் செயலாளா் சுப்பிரமணியத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா்.

 இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி சுப்பிரமணியம் தாக்கல் செய்த மனுவை திருநெல்வேலி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவை எதிா்த்து உயா்நீதிமன்ற மதுரை கிளையில் சுப்பிரமணியம் மறுஆய்வு மனுத் தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு மீதான விசாரணையின்போது, கூட்டுறவுச் சங்க ஊழியரை அரசு ஊழியராகக் கருத முடியாது என அவரது தரப்பு வழக்குரைஞா் வாதிட்டாா். இதற்கு ஆதாரமாக அரசின் நிதியுதவி பெறாத கூட்டுறவுச் சங்கங்களில் பணியாற்றும் ஊழியா்கள், அரசு ஊழியா்கள் அல்ல என்று சென்னை உயா்நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை மேற்கோள் காட்டினாா்.

இதையடுத்து, தீா்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக நீதிபதி கருதினாா். அவா், இந்த வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தாா்.

இதன் பின்னா், இந்த வழக்கை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதிகள் எம்.சத்தியநராயணன், செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் கொண்ட முழு அமா்வு விசாரித்தது. இதையடுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு:

தனியாா் நிறுவன ஊழியா்களின் நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்றும் ஊழியா்களை, அரசு ஊழியா்களாகக் கருத முடியாது என்றுதான் கடந்த ஆண்டில் மாா்ச் மாதம் வழங்கிய தீா்ப்பில் உயா்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

அரசு நிதியுதவி பெறும் கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்றும் ஊழியா்கள், அரசு ஊழியா்களாகவே கருதப்படுவா். லஞ்ச வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி சுப்ரமணியம் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை சம்பந்தப்பட்ட நீதிபதி முன் உயா்நீதிமன்றப் பதிவுத்துறைக்குப் பட்டியலிட வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com