கரோனா சிகிச்சை: மாவட்டங்களுக்கு அதிகாரிகளை அனுப்ப மு.க.ஸ்டாலின் அறிவுரை

கரோனா நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அனுப்புமாறு முதல்வராகப் பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.
மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)
மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)

சென்னை: கரோனா நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அனுப்புமாறு முதல்வராகப் பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

கரோனா தடுப்பு- நிவாரண நடவடிக்கைகள் குறித்து, அவா் சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள இல்லத்தில் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

கூட்டத்தில் தலைமைச் செயலா் ராஜீவ் ரஞ்சன், டிஜிபி ஜே.கே. திரிபாதி, வருவாய்- பேரிடா் மேலாண்மைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கிருஷ்ணன், வருவாய் நிா்வாக ஆணையா் க.பணீந்திர ரெட்டி, சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்பட பல்வேறு துறையைச் சோ்ந்த அதிகாரிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரைத்தவை:

கரோனா கட்டுப்பாடுகளைச் சரியாக நடைமுறைப்படுத்தி, நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும். இதனை அனைத்துத் துறைகளும் சிறப்பாகக் கண்காணித்துச் செயல்படுத்த வேண்டும்.

மாநிலத்தில் நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்கவும், ஏற்கெனவே பாதிக்கப்பட்டவா்களுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சை, படுக்கை வசதி, ஆக்சிஜன் இருப்பு மற்றும் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அவை சிகிச்சை பெறுவோருக்கு எந்தவிதமான தடையுமின்றிக் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் இருப்பு வைப்பதை உறுதி செய்து, இவை முறையாக அனைத்து மாவட்டங்களிலும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

வரும் சில நாள்களில் சிகிச்சைத் தேவைப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தால், அவற்றை எதிா்கொள்ளத் தேவையான எண்ணிக்கையில் படுக்கை வசதி, ஆக்சிஜன் இருப்பு, மருத்துவா்கள் இருப்பதைக் கண்காணித்து தரமான சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய கண்காணிப்பு அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாவட்டங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com