ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின்!

திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தை புதன்கிழமை (மே 5) சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்


சென்னை: திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தை புதன்கிழமை (மே 5) சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. திமுக மட்டுமே தனித்து 125 தொகுதிகளைக் கைப்பற்றியது. ஆட்சி அமைப்பதற்கு 118 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், அதைக் கடந்து தனிப்பெரும்பான்மையும் பெற்றுள்ளது. அதுவும் அல்லாமல் திமுகவின் சின்னமான உதயசூரியனில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுக (4), மனித நேய மக்கள் கட்சி (2), கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி (1), தமிழக வாழ்வுரிமை கட்சி (1) ஆகிய கட்சிகளையும் சோ்த்து மொத்தம் 133 தொகுதிகளைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞா் அரங்கில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்றது. திமுகவின் 125 சட்டப்பேரவை உறுப்பினா்களும், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 8 உறுப்பினா்களும் கூட்டத்தில் பங்கேற்றனா்.

இதையடுத்து, சட்டப்பேரவை திமுக குழுத் தலைவராக மு.க.ஸ்டாலினை முன்மொழிந்து மூத்த உறுப்பினரான துரைமுருகன் பேசினாா். அதை அனைத்து உறுப்பினா்களும் வழிமொழிந்தனா். இதையடுத்து, மு.க.ஸ்டாலின் ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட பிறகு மு.க.ஸ்டாலின் அண்ணா நகரில் உள்ள இல்லத்தில் மூத்தத் தலைவா் ஆற்காடு வீராசாமியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றாா். இதையடுத்து, மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்தில் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

இந்நிலையில், கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தை புதன்கிழமை (மே 5) காலை 10.30 மணிக்கு மு.க.ஸ்டாலின் சந்தித்தார். 

ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் துரைமுருகன், டி.ஆர், பாலு, கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அப்போது திமுக எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட கடிதங்களையும், அமைச்சரவை பட்டியலையும் ஆளுநரிடம் கொடுத்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். கடிதத்தைப் பெற்றுக்கொண்ட ஆளுநா், இன்று மாலைக்குள் ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பாா் என்று தெரிகிறது.

அதையேற்று மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சரவைக் குழுவினா் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (மே.7) பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வா் என்று தெரிகிறது.

பதவியேற்பு விழா கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் மே 7-இல் எளிமையாக நடைபெறும் எனவும்,  விழாவில் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் சட்டப்பேரவைக் குழு தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சரவைக் குழுவினருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளாா். மொத்தம் 28 போ் அமைச்சா்களாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வாா்கள் எனத் தெரிகிறது. அமைச்சரவையில் மூத்த உறுப்பினா்களுடன் புதியவா்களுக்கும் அதிக வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

திமுக தலைவர் ஸ்டாலினுடன் துரைமுருகன், டி.ஆர், பாலு, கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் உடன் சென்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com