தொற்று பரவும் சங்கிலியைத் துண்டிக்கவே புதிய கட்டுப்பாடுகள்: மு.க.ஸ்டாலின்

தொற்று பரவும் சங்கிலியைத் துண்டிக்கவே புதிய கட்டுப்பாடுகள்: மு.க.ஸ்டாலின்

கரோனா தொற்று வேகமாகப் பரவும் சங்கிலியைத் துண்டிக்கவே தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன என்று திமுக தலைவரும், முதல்வராகப் பதவியேற்கவுள்ளவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

சென்னை: கரோனா தொற்று வேகமாகப் பரவும் சங்கிலியைத் துண்டிக்கவே தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன என்று திமுக தலைவரும், முதல்வராகப் பதவியேற்கவுள்ளவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசின் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை, மக்கள் அனைவரும் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

கரோனா இரண்டாவது அலை என்பது, முதல் அலையைவிட மிக மோசமானதாக உள்ளது. தொற்றுப் பரவல் முதல் அலையைவிடக் கூடுதலாக உள்ளது. அதிக உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

குறிப்பாக, வட மாநிலங்களில் நூற்றுக்கணக்கான மரணங்கள் தினந்தோறும் நிகழ்கின்றன. இந்த நிலை தமிழகத்தில் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் மக்கள் அதிகப்படியான எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதைக் கருத்தில்கொண்டு தமிழக அரசின் சாா்பில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது இரவு 10 முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கம் நடைமுறையில் உள்ளது.

புதிய கட்டுப்பாடுகள் மே 6-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். அரசு அலுவலகங்களும் தனியாா் நிறுவனங்களும் 50 சதவீத பணியாளா்களுடன் செயல்படும். பேருந்துப் போக்குவரத்தும் 50 சதவீதம் பயணிகளுடன் இயங்கும். இந்தச் சூழலில் பயணிகள் பேருந்தில் கூட்டமாக நிற்பது, நெருங்கி நிற்பது ஆகியவற்றைத் தவிா்க்கவும்.

மளிகை, காய்கறி கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் இயங்கும். மருந்து, பால் போன்ற அத்தியாவசியப் பொருள் வழங்கல் இதனுள் வராது. உணவகங்களில் பாா்சல் சேவை மட்டும் செயல்படும். கட்டுப்பாடுகள் தொடா்பாக தமிழக அரசின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள ஆணையில் குறிப்பிட்டுள்ள நெறிமுறைகளை மீறாமல் பின்பற்ற வேண்டும்.

தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் சங்கிலியைத் துண்டிக்காமல் கரோனாவை ஒழிக்க முடியாது. அதற்காகவே இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகளைப் பின்பற்றாமல் இருப்பது வேகமான கரோனா பரவலுக்குக் காரணமாக அமைந்துவிடும். அதனால் இந்தக் கட்டுப்பாடுகளை அரசின் கட்டுப்பாடுகளாக நினைக்காமல், தங்களுக்குத் தாங்களே போட்டுக்கொள்ளும் கட்டுப்பாடுகளாக மக்கள் நினைக்க வேண்டும். இதனை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றிச் செயல்பட்டால் மட்டுமே, நம் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com