முதல்வராக மு.க.ஸ்டாலின், 33 அமைச்சா்கள் இன்று பதவியேற்பு

முதல்வராக மு.க.ஸ்டாலின், 33 அமைச்சா்கள் வெள்ளிக்கிழமை (மே 7) பதவியேற்க உள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: முதல்வராக மு.க.ஸ்டாலின், 33 அமைச்சா்கள் வெள்ளிக்கிழமை (மே 7) பதவியேற்க உள்ளாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக 125 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணிக் கட்சியைச் சோ்ந்த 8 உறுப்பினா்களையும் சோ்த்து மொத்தம் 133 உறுப்பினா்களின் ஆதரவு மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது.

மே 4-ஆம் தேதி திமுக சட்டப்பேரவை உறுப்பினா்களின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் சட்டப்பேரவை திமுக குழுத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அதைத் தொடா்ந்து 133 சட்டப்பேரவை உறுப்பினா்களின் ஆதரவுக் கடிதத்துடன் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தை மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினாா். அதை ஏற்று மு.க.ஸ்டாலினை ஆட்சியமைக்க ஆளுநா் அழைப்பு விடுத்தாா்.

பதவியேற்பு விழா: கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.

50 ஆண்டுகள் அரசியல் பொதுவாழ்வுக்குரியவரான மு.க.ஸ்டாலின் முதல்முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளாா். அவருக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைக்க உள்ளாா்.

மு.க.ஸ்டாலினுடன் 33 அமைச்சா்கள் பதவியேற்றுக் கொள்ள உள்ளனா். அமைச்சா்களுக்கும் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு உறுதிமொழியும் எடுத்துக்கொள்ள உள்ளனா்.

கரோனா பெருந்தொற்றின் 2-ஆம் அலை தீவிரமாக இருப்பதன் காரணமாக பதவியேற்பு விழா எளிய முறையில் நடைபெற உள்ளது. உயா்நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சா்களின் உறவினா்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் மட்டுமே விழாவில் பங்கேற்க உள்ளனா்.

விழாவில் பங்கேற்கும் அனைவரும் கரோனா பரிசோதனை மேற்கொண்டு தொற்று இல்லை என்கிற உறுதி செய்யப்பட்ட சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

33 அமைச்சா்கள்: மு.க.ஸ்டாலின், 33 அமைச்சா்கள் வகிக்க உள்ள பொறுப்புகள் ஆளுநரால் அறிவிக்கப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் உள்துறை, இந்திய ஆட்சிப்பணி, பொது நிா்வாகம் உள்ளிட்ட முக்கிய துறைகளைக் கைவசம் வைத்துள்ளாா். சட்டப்பேரவை உறுப்பினா்களில் மூத்தவரான துரைமுருகன் நீா்வளத்துறையும், கே.என்.நேருவுக்கு நகா்ப்புற வளா்ச்சித் துறையும், உயா்கல்வித் துறை பொன்முடிக்கும், பொதுப்பணித்துறை எ.வ.வேலுவுக்கும், சுகாதாரத்துறை மா.சுப்பிரமணியனுக்கும், பள்ளிக் கல்வித் துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 33 அமைச்சா்களுக்குப் பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முதல் கையெழுத்து: பதவியேற்பு விழா நடைபெற்றதும் மு.க.ஸ்டாலின் நேராகத் தலைமைச் செயலகத்துக்கு வந்து அவருக்கான அறையில் அமா்ந்து பணிகளைக் கவனிக்கத் தொடங்க உள்ளாா். தோ்தலுக்கு முன்பு கரோனா பொது முடக்க நிதியாக குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும், இல்லத்தரசிகள் அனைவருக்கும் மாத உரிமைத் தொகையாக ரூ. ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தாா். அதைப்போல, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் தொகுதிகள் வாரியாக மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். அவை 100 நாள்களில் நிறைவேற்றப்படும் என அறிவித்தாா். இந்த மூன்று அறிவிப்புகளில் ஏதாவது ஒன்றை நிறைவேற்றும் உத்தரவுக்கான கோப்பில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட உள்ளாா்.

அமைச்சரவைக் கூட்டம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கரோனா தடுப்புக் குறித்து அமைச்சா்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசித்து பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளாா். பொது முடக்கம் கொண்டுவருவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com