முதல்வர் அறிவிப்புகள்; பொற்கால ஆட்சி தொடங்கி விட்டது: வைகோ வரவேற்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கின்ற ஐந்து அறிவிப்புகளும், மக்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்று இருக்கின்றது என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.
முதல்வர் அறிவிப்புகள்; பொற்கால ஆட்சி தொடங்கி விட்டது: வைகோ வரவேற்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கின்ற ஐந்து அறிவிப்புகளும், மக்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்று இருக்கின்றது என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இன்று காலையில், தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகப் பொறுப்பு ஏற்ற பிறகு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கின்ற ஐந்து அறிவிப்புகளும், மக்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்று இருக்கின்றது. பொற்கால ஆட்சி தொடங்கி விட்டது என்ற நம்பிக்கையை விதைத்து இருக்கின்றது.

கரோனா பாதிப்புகளை ஈடுகட்ட உதவியாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ 4000 தருவதாக உறுதிமொழி கூறியபடி, முதல் தவணையாக, இந்த மாதமே ரூ 2000 வழங்குவதாக அறிவித்து இருக்கின்றார்.

ஆவின் பால் விலை, லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்து இருப்பது, குழந்தைகளில் வயிற்றில் பால் வார்த்து இருக்கின்றது.

நாளை முதல், அனைத்து மகளிரும், சாதாரண கட்டணப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம்;

தனியார் மருத்துவமனைகளில் கரோனா மருத்துவம் பெறுவோருக்கு ஆகின்ற செலவுகளை, முதல் அமைச்சரின் காப்பு ஈட்டுத் திட்டத்தின் கீழ், தமிழக அரசே செலுத்தும்;

மக்கள் தெரிவிக்கின்ற குறைகளின் மீது உடனடி நடவடிக்கை எடுத்துச் சீர் செய்திட, ‘உங்கள் தொகுதியில் முதல் அமைச்சர்’ என்ற திட்டம் தொடங்கப்படுகின்றது; அதற்குப் பொறுப்பாளராக ஒரு ஐஏஎஸ் அதிகாரி செயல்படுவார் என்ற ஐந்து அறிவிப்புகளின் மூலம்,  எடுத்த எடுப்பிலேயே நடுநிலையாளர்களின் மனதைக் கவர்ந்து கொண்டார். எதிரிகள் வட்டாரம் திடுக்கிட்டுப் போயிருக்கின்றது.

தமிழ்நாட்டில் ஐந்து என்பதற்கு ஒரு சிறப்பு உண்டு. நிலம், நீர், காற்று நெருப்பு, வெளி இவற்றையே இயற்கையின் அமைப்பாக வகுத்து இருக்கின்றனர். தமிழ் இலக்கியங்களில், ஐம்பெருங் காப்பியங்கள் தனிச்சிறப்பு பெற்றவை.

அறிஞர் அண்ணா மறைந்தபிறகு, திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில், தி.மு.கழகத்தின் அடிப்படைக் கொள்கைகள் என, ஐந்து முழக்கங்களைக் கலைஞர் எழுப்பினார்.

அந்த வரிசையில், இன்றைய ஐந்து அறிவிப்புகளும் இடம் பெறுகின்றன. இனி ஐந்து ஆண்டுகளும் பொற்கால ஆட்சியாக இருக்கும் என்பதற்கு அடையாளம் இது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைவருடைய எதிர் பார்ப்புகளையும் விஞ்சி, ஆட்சி புரிந்து புகழ் பெறுவார். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com