முழு ஊரடங்கை மக்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் உரை

தமிழகத்தில் மே 10-ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கை மக்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
14 நாள்கள் வீட்டிலேயே இருந்தால் கரோனா பரவல் சங்கிலியை உடைக்கலாம்: முதல்வர் ஸ்டாலின் உரை
14 நாள்கள் வீட்டிலேயே இருந்தால் கரோனா பரவல் சங்கிலியை உடைக்கலாம்: முதல்வர் ஸ்டாலின் உரை


சென்னை: தமிழகத்தில் மே 10-ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கை மக்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து விடியோ வாயிலாக தமிழக மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய முழு உரை..

இது ஒரு கட்சியின் அரசாக இல்லாமல் - அனைத்து மக்களின் அரசாக இருக்கும். அவ்வாறு தான் செயல்படும். தமிழக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடனே கோட்டைக்கு வந்து நான் 5 முக்கியமான அரசாணைகளைப் பிறப்பித்தேன்.

தேர்தல் நேரத்தில் என்னால் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்டவை தான் அவை.

* கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்படும் கட்டுப்பாடுகள் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்ற மக்களுடைய துயரத்தை போக்குகின்ற வகையில், அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பத்திற்கு தலா 4 ஆயிரம் ரூபாய் தரப்படும். அதில் முதல் கட்டமாக 2 ஆயிரம் ரூபாய் இந்த மே மாதத்திலேயே வழங்கப்படும் என்பதற்கான எனது முதல் கையெழுத்து.

* ஆவின் பால் விலையை, லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் வீதம் குறைத்து விற்பனை செய்வதற்கான அரசாணையில் இரண்டாவது கையெழுத்து.

* அரசு கட்டுப்பாட்டில் இயங்குகின்ற நகரப் பேருந்துகளில், பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்வதற்கான உத்தரவில் மூன்றாவது கையெழுத்து.

* தேர்தல் பரப்புரையின் போது தொகுதிகள் தோறும் நான் பெற்ற மனுக்கள் மேல் நடவடிக்கை எடுக்க, ”உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் கீழ், புதிய துறையை உருவாக்குவதற்கான உத்தரவில் நான்காவது கையெழுத்து.

* கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை செய்கிறவர்களுடைய இன்னலைக் குறைக்கின்ற வகையில், அதற்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டுத் திட்டத்தில் ஏற்கும் என்பதற்கான ஐந்தாவது கையெழுத்து போட்டிருக்கிறேன். இது கொரோனா என்ற பெருந்தொற்றுக் காலமாக இருக்கின்றதால், அதனைக் கட்டுப்படுத்தினோம் - முழுமையாக ஒழித்தோம் - கொரோனா தொற்றே இனி இல்லை என்கின்ற சூழலை தமிழகத்தில் உருவாக்கவே தமிழக அரசு முழு முயற்சியில் இறங்கி இருக்கிறது.

கொரோனா தொற்று ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவாமல் தடுப்பது - கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளானவர்களை முழுமையாக மீட்பது ஆகிய 2 குறிக்கோள்களை தமிழக அரசு முன்னெடுத்து செயல்பட்டு கொண்டிருக்கிறது.

முதல் அலையை விட மோசமாக இந்த கிருமி உருமாறியிருக்கிறது. இப்போது இளைஞர்கள், குழந்தைகள் ஆகியோரை அதிக அளவில் பாதித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, இளைஞர்களின் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. 2 அல்லது 3 நாட்களுக்குள் நுரையீரலை அதிகமாக பாதிக்கிறது.

வேறு ஏதாவது நோய் பாதிப்பு இருக்கிறவர்களுடைய மரணம் அதிகமாக இருந்த நிலைமை மாறி, வேறு நோய் பாதிப்புகளே இல்லாதவர்களும் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

இப்போது நோய்த் தொற்று ஏற்படுவது மிக மோசமான நிலையில் இருக்கிறது. உடல் வலிமையை இந்த நோய்த் தொற்று இழக்க வைக்கிறது.

வட மாநிலங்களில் இருந்தும், நமது பக்கத்து மாநிலங்களில் இருந்தும் வரும் தகவல்கள் அச்சம் தரக்கூடியதாக இருக்கிறது. அந்தளவிற்கு தமிழகம் மோசம் அடையவில்லையென்றாலும், பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பெருந்தொற்று தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது. தினந்தோறும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புதிய தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.

2 வாரங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். அவ்வாறு அதிகமானால், நோயைக் கட்டுப்படுத்துவது மருத்துவத் துறைக்கு மாபெரும் சவாலாக ஆகிவிடும். அவர்கள் இப்போதே மிக மிகக் கடுமையாக, தங்கள் உயிரைப் பணயம் வைத்து செயல்பட்டு வருகிறார்கள்.

இது தொடர்பாக அரசு அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினேன். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்னொரு ஊரடங்கு அவசியம் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். இது தொடர்பாக மருத்துவ நிபுணர்களிடம் கேட்டபோதும் அவர்களும் அதையே பரிந்துரை செய்கிறார்கள்.

ஊரடங்குக் கட்டுப்பாடுகளை போடாமல் கொரோனாவை கட்டுப்படுத்த இயலாது என்ற சூழலில் 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு காலமாக அறிவிக்கப்படுகிறது.

பால், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், பத்திரிகைகள், வேளாண்மை விற்பனை மையங்கள் நீங்கலாக மற்ற சேவைகள் இருக்காது.

பலசரக்கு, காய்கறி கடைகள், இறைச்சிக் கடைகள் மதியம் 12 மணி வரை மட்டும் இயங்கலாம். சாலையோர காய்கறி, பூக்கடைகளுக்கு அனுமதி உண்டு. மற்ற கடைகளுக்கு அனுமதி இல்லை. உணவகங்களில் பார்சல் சேவை மட்டுமே உண்டு.

இதனால், ஏழை எளிய மக்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது உண்மை தான். ஊரடங்கு காலமாக அறிவிக்கவில்லை என்றால், கொரோனாவை கட்டுப்படுத்துவது சிரமமானதாக ஆகிவிடும். இதை உணர்ந்து அருகில் உள்ள கேரளா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்தி இருக்கிறார்கள். தமிழக அரசும் ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்துகிறது.

இந்த 14 நாளும் ஊரடங்குக் கட்டுப்பாட்டை பயன்படுத்தி, நாட்டு மக்கள் அனைவரும் கட்டுப்பாடாக இருந்தால், தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். கொரோனா பரவும் சங்கிலியை உடைக்காமல் கொரோனாவை ஒழிக்க முடியாது என்பதை மனதில் வைத்து, மக்கள் எல்லோரும் செயல்பட வேண்டும்.

அனைவரும் வீட்டிலேயே இருங்கள். முகக்கவசம் அணியுங்கள். கிருமி நாசினியை பயன்படுத்துங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகப்படுத்துங்கள். பழங்கள், காய்கறிகளை உணவில் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். சிறு அறிகுறி இருந்தாலும் மருத்துவருடைய ஆலோசனையை பெறுங்கள். 

பயம் மட்டும் வேண்டாம். இது குணப்படுத்தக்கூடிய நோய் தான். இது கஷ்டமான காலம் தான். அதேநேரத்தில் கடக்க முடியாத காலம் அல்ல. நோய் நாடி, அதன் காரணமும் அறிந்துவிட்டால் நிச்சயம் குணப்படுத்தி விடலாம். 

கொரோனா தொற்று பரவல் தொடர்பாக, நேற்று 3 மணி நேரத்திற்கும் மேலாக மாநிலத்தில் இருக்கின்ற முக்கிய அரசு செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள், மருத்துவ நிபுணர்களோடு நான் ஆலோசனை நடத்தினேன். 

அதிகாரிகள் கூட்டத்தில் நான் ஒன்றை குறிப்பிட்டுச் சொன்னேன். கொரோனா பரவல் குறித்த முழு உண்மையைச் சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். உண்மையை நேருக்கு நேராகச் சந்திக்க வேண்டும் என்று நான் சொன்னேன். அந்த வகையில் கொரோனா என்கிற பெருந்தொற்றுக்கு எதிராக நமது நடவடிக்கைகள் இன்று முதல் வேகம் எடுத்து விட்டது. அரசின் உடைய உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு நீங்கள் எல்லோரும் நடந்துகொள்ள வேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

நம்மையும் நாட்டு மக்களையும் காப்போம். கொரோனா தொற்றில் இருந்து தமிழகத்தை மீட்போம்!  என்று முதல்வர் உரையாற்றினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com