சிதம்பரம்: பொதுமக்களுக்கு அறிவிப்பின்றி செயல்படும் கரோனா கட்டுப்பாட்டு மையம்

சிதம்பரம் நகராட்சி வளாகத்தில் கரோனா கட்டுப்பாட்டு மையம் மக்களுக்கு அறிவிப்பின்றி செயல்பட்டு வந்ததை அடுத்து, மக்களுக்கு தெரியும் வகையில் அறிவிப்பு வெளியிட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப்சிங்பேடி உத்தரவு.
சிதம்பரம்: பொதுமக்களுக்கு அறிவிப்பின்றி செயல்படும் கரோனா கட்டுப்பாட்டு மையம்

சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சி வளாகத்தில் கரோனா கட்டுப்பாட்டு மையம் பொதுமக்களுக்கு அறிவிப்பின்றி செயல்பட்டு வந்ததை அடுத்து, ஆய்வு செய்ய வந்த கண்காணிப்பு அலுவலர் ககன்தீப்சிங்பேடி பொதுமக்களுக்கு தெரியும் வகையில் அறிவிப்பு வெளியிடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சிதம்பரத்தில் கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிகளை ஆய்வு செய்ய வந்த தமிழக அரசின் முதன்மைச் செயலாளரும், கடலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி, கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி, மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி அருண் சத்யா, கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை உயரதிகாரிகள் ஆகியோர் சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா  கட்டுப்பாடு மையத்தை பார்வையிட்டு சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.

இந்த மையம் கண்காணிப்பு அலுவலர் வருகையை முன்னிட்டு திடீரென அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆய்வின்போது ககன்தீப்சிங்பேடி நகராட்சி ஆணையாளர்  மற்றும் மருத்துவ அதிகாரிகளிடம் பொதுமக்கள் எத்தனை பேர் இந்த கட்டுப்பாட்டு மையத்தில் கரோனா தொற்று பரவல்  சம்பந்தமாக தகவல் தெரிவித்து பேசியுள்ளனர் என கேள்வி எழுப்பினார். அதற்கு யாரும் இதுவரை கட்டுப்பாட்டு மையத்திற்கு பேசவில்லை என நகராட்சி ஆணையாளர்  மற்றும்  மருத்துவத்துறை அதிகாரிகள் பதில் தெரிவித்தனர்.

அப்பொழுது அங்கிருந்த செய்தியாளர்கள் இந்த மையம் இங்கு இருப்பது பொதுமக்களுக்கு எவருக்குமே தெரியாது என்றும் இது சம்பந்தமாக முறையான எந்த அறிவிப்பையும் நகராட்சி வெளியிடவில்லை. பொதுமக்கள் யாருக்கும் இந்த கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண் தெரியாது என ககன்தீப்சிங்பேடியிடம் தெரிவித்தனர்.

பின்பு ககன்தீப் சிங் பேடி இந்த கட்டுப்பாட்டு மையம் பற்றி பொதுமக்கள் அறியும் வகையில் சிதம்பரம் டிஎஸ்பி த.ஆ.ஜோ லாமேக் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து செயல்பட நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சிதம்பரம் நகராட்சியில் உள்ள கரோனா கட்டுப்பாட்டு மையம் தொலைபேசி எண்: 04144 222231.

தடை செய்யப்பட்ட பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்படவில்லை: சிதம்பரம் நகராட்சி பகுதியில் கரோனா தொற்று ஏற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இரும்புத் தகரம் கொண்டு தடுப்பு மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் நகராட்சி நிர்வாகத்தால் பிளீச்சிங்பவுடர் மற்றும் கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை. மேலும், நகரம் முழுவதும் சுகாதார சீர்கேடாக உள்ளது என கண்காணிப்பு அலுவலர் ககன்தீப்சிங்பேடியிடம் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்குமாறு ககன்தீப்சிங்பேடி உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com