அரசுப் பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவு

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு அரசுப் பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
அரசுப் பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவு

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு அரசுப் பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

பேருந்துகளில் பயணம் செய்கின்ற பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்ற வகையில், மத்திய அரசின் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள 'நிர்பயா' திட்டத்தின் வாயிலாக, அனைத்துப் பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துதல், பொதுமக்கள் தங்கள் கைப்பேசியின் வாயிலாக, பேருந்து வழித்தடங்களை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சலோ ஆப் செயலியினை விரைந்து செயல்படுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்தியில், 

அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டமானது, போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தலைமையில், இன்று (13.05.2021), மாநகர் போக்குவரத்துக் கழக, தலைமையக கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறையின் செயலாளர் திரு.சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., மற்றும் அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்கள், இயக்க ஊர்திகள் இயக்குநர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து நிதி மேம்பாட்டு நிறுவனம், சாலைப் போக்குவரத்து நிறுவனம் (தரமணி) உள்ளிட்ட நிறுவனங்களின் முக்கிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள், செலவீனங்களை குறைத்து நிதி நிலையினை மேம்படுத்துதல், அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றி, பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்து, பாதுகாப்பான முறையில் பேருந்துகளை இயக்குதல், போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து செயல்படுத்துதல், மத்திய அரசின் “நிர்பயா” திட்டத்தினை விரைந்து செயல்படுத்துதல், நிலுவையிலுள்ள பணியாளர்களின் பதவி உயர்வு மற்றும் ஓய்வூதியப் பலன்களை விரைந்து வழங்குதல், பணிமனைகளை பழுது நிவர்த்தி செய்து புதுப்பித்தல் மற்றும் கிராமப்புற மக்களின் போக்குவரத்துத் தேவைகளை ஈடு செய்கின்ற வகையில் கூடுதல் பேருந்துகளை இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்து விரிவாக கலந்து ஆலோசிக்கப்பட்டன.

இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது: 

நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு தமிழ்நாடு அரசு அனைத்துப் போக்குவரத்துக் கழக, 6,628 நகர்புறப் பேருந்துகளிலும் அடுத்த நாளே (08.05.2021) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

இத்திட்டமானது, பணிபுரியும் பெண்கள் மற்றும் உயர் கல்வி பயிலும் மகளிர் உள்ளிட்ட அனைத்துத் பெண்களிடமும் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ளது. சென்னையில், தற்பொழுது 1,400 சாதாரண கட்டண பேருந்துகளில் பயணித்திட அனுமதிக்கப்படுகிறார்கள். இந்தப் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, பல வழித்தடங்களில் விரைவில் விரிவுப்படுத்தப்படும்.

குறிப்பாக, திருநங்கையர்கள் பயன்பெறுகின்ற வகையில் முதல்வருடன் கலந்து பேசி ஆவன செய்யப்படும் என்று தெரிவித்தார். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள, அனைத்துப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் பல்வேறு முக்கிய பிரச்னைகள் அனைத்தும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அனைவரும் பயன் பெறுகின்ற வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பேருந்துகளில் பயணம் செய்கின்ற பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்ற வகையில், மத்திய அரசின் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள “நிர்பயா” திட்டத்தின் வாயிலாக, அனைத்துப் பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துதல், பொதுமக்கள் தங்கள் கைப்பேசியின் வாயிலாக, பேருந்து வழித்தடங்களை எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள, சலோ ஆப் செயலியினை விரைந்து செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆட்சிக் காலங்களில் முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தினால், தொடர்ந்து போக்குவரத்துக் கழகங்கள் கடும் நிதி நெருக்கடியினை சந்தித்து வருகின்றன. இதுபோன்ற மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் உறுதியானத் தீர்வு காணப்படும். குறிப்பாக, ஓட்டுநர்களுக்கு சீரிய முறையில் தரமான பயிற்சிகளும் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற சிறப்பு கூட்டங்களும், நலன்களை பாதுகாக்கின்ற வகையில், மருத்துவ முகாம்களும் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். போக்குவரத்துக் கழகங்களின் பணிகளை மேம்படுத்திடும் வகையில், திறம்பட பணியாற்றி, பொதுமக்களுக்கு தரமான போக்குவரத்துச் சேவையினை வழங்குவதிலும், பணியாளர்களின் நலன்களில் மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டு, துறைக்கும், இந்த அரசுக்கும் பெருமை சேர்த்திட அர்ப்பணிப்புடன் பணியாற்றிட வேண்டும் என்று பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com