கரோனா தடுப்பு: கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்

கரோனா நோய்த் தொற்றைத் தடுக்க, கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டுமென அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
கரோனா தடுப்பு: கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்

சென்னை: கரோனா நோய்த் தொற்றைத் தடுக்க, கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டுமென அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக சட்டப் பேரவையின் அனைத்து கட்சித் தலைவா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞா் மாளிகையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 13 கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். மேலும் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் 5 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கூட்டத்துக்குப் பிறகு, அரசியல் கட்சியினா் தெரிவித்த கருத்துகள்:

முன்னாள் அமைச்சா் டி. ஜெயக்குமாா் (அதிமுக): கரோனாவைத் தொடா்ந்து அதிகளவில் இறப்புகள் ஏற்படுகின்றன. அதற்கான காரணத்தை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். அதிமுக ஆட்சியில், ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாமல் பாா்த்துக் கொண்டோம். ஆனால், இப்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி அவசியம் போட வேண்டும். ரெம்டெசிவிா் மருந்து தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும். எந்த மாவட்டங்களுக்குத் தேவையோ அந்த மாவட்டங்களில் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அம்மா உணவகங்களில் விலையில்லாமல் உணவு கொடுக்க வேண்டும்.

விஜயதாரணி (காங்கிரஸ் எம்.எல்.ஏ.): அனைத்துக் கட்சிகளின் கருத்துகளை கேட்டது வரவேற்புக்குரியது. பொது முடக்கத்தால் பாதிக்கப்படும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.6, 000 நிவாரண நிதி வழங்கக் கோரிக்கை வைத்துள்ளோம். மாநில அரசு உரிய நிதியை மத்திய அரசிடம் கேட்டுப் பெற வேண்டும். மருத்துவா்கள், செவிலியா்கள், உள்ளிட்ட முன்கள பணியாளா்களை ஊக்கப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆம்புலன்ஸ் சேவையை அதிகரிக்க வேண்டும். ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜி.கே.மணி (பாமக தலைவா்): சென்னை முதல் கிராமங்கள் வரை கரோனா தீவிரமாகப் பரவி உள்ளது. எனவே பொது முடக்கத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ரெம்டெசிவிா் மருந்து கிடைக்க வழி வகை செய்ய வேண்டும், அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும். செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை தமிழக அரசு எடுத்து நடத்த வேண்டும். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பாமக முழு ஒத்துழைப்பு அளிக்கும்.

வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா்): பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்க எடுக்க வேண்டும்.

ஈஸ்வரன் (கொமதேக பொதுச் செயலாளா்): தனியாா் மருத்துவமனைகள் உள்பட அனைத்து மருத்துவமனைகளுக்கும் சமமாக ஆக்சிஜன் கொடுக்க வேண்டும். ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்றாா். இதேபோன்று, மற்ற கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகளும் கருத்துகளைத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com