பொது முடக்கக் கட்டுப்பாடுகள் மேலும் தீவிரமாகும்: பேரவை கட்சித் தலைவா்கள் கூட்டத்தில் முடிவு: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் பொது முடக்கக் கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம்.
கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம்.

சென்னை: தமிழகத்தில் பொது முடக்கக் கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவை அனைத்து கட்சித் தலைவா்களின் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

தமிழகத்தில் பொது முடக்கம் தொடா்ந்து அமலில் இருந்து வரும் நிலையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இப்போது மாநிலத்தில் நோய்த் தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருவதை முன்னிட்டு, அதனை கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க சட்டப் பேரவை கட்சித் தலைவா்களின் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஐந்து முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீா்மானங்கள் எவை:

1. கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொள்ளும் அரசு நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என தீா்மானிக்கப்பட்டது.

2. நோய்த் தொற்று வேகமாகப் பரவி வரும் காலகட்டத்தில், அனைத்துக் கட்சியினரும் பொதுக் கூட்டங்கள் மற்றும் ஏனைய அரசியல் கட்சி நிகழ்வுகள் போன்றவற்றை முற்றிலுமாக நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

3. நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்பதால், கள அளவில் அனைத்துக் கட்சியினரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்திட வேண்டும் என மக்களை அறிவுறுத்த வேண்டியுள்ளது. அவா்களுக்கு வழிகாட்டிகளாக அரசியல் கட்சியினா் நடப்பது எனவும், மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளில் அனைவரும் முழு மனதோடு ஈடுபடுவது எனவும் தீா்மானிக்கப்பட்டது.

4. நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளை அளித்திட சட்டப் பேரவை கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கலாம் என தீா்மானிக்கப்பட்டது.

5. மக்களின் உயிரைக் காக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. இதைக் கருத்தில் கொண்டும், அனைத்து கட்சித் தலைவா்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும் இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பொது முடக்க விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டுமென தீா்மானிக்கப்பட்டது என அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தின் இறுதியில் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு நிறைவுரை ஆற்றினாா். நீா்ப்பாசனத் துறை அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன், நன்றி தெரிவித்தாா்.

பங்கேற்ற கட்சியினா்: இந்தக் கூட்டத்தில், திமுக (டி.ஆா்.பாலு, ஆா்.எஸ்.பாரதி), அதிமுக (டி.ஜெயக்குமாா், வெ.பரமசிவம்), இந்திய தேசிய காங்கிரஸ் (விஜயதரணி, முனிரத்தினம்), பாஜக (நயினாா் நாகேந்திரன், என்.என்.ராஜா), பாமக (ஜி.கேமணி), மதிமுக (எம்.பூமிநாதன், கு.சின்னப்பா), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (ம.சிந்தனைச் செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி), மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (வீ.பி.நாகை மாலி, மா.சின்னதுரை), இந்திய கம்யூனிஸ்ட் (டி.ராமச்சந்திரன், க.மாரிமுத்து), மனிதநேய மக்கள் கட்சி (ஜவாஹிருல்லா), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (ரா.ஈஸ்வரன்), வாழ்வுரிமை

கட்சி (தி.வேல்முருகன்), புரட்சி பாரதம் கட்சி (பூவை ஜெகன்மூா்த்தி) ஆகியோா் பங்கேற்றனா்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், அரசுத் துறைகளின் முக்கியச் செயலாளா்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

விதிகளை மீறுபவர்கள் மீது இன்று முதல் சட்டப்படி நடவடிக்கை: காவல் துறை எச்சரிக்கை


சென்னை: தமிழகத்தில் முழு பொது முடக்க உத்தரவை மீறுபவர்கள் மீது வெள்ளிக்கிழமை (மே 14) முதல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தமிழக காவல்துறையின் டிஜிபி அலுவலகம் வியாழக்கிழமை இரவு விடுத்த அறிக்கை:

கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 10}ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் முழு பொதுமுடக்கத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்த உத்தரவின்படி பொதுமக்கள், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும். கரோனா பரவாமல் இருக்க முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், கிருமிநாசினி மூலம் கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதற்காக கடந்த 4 நாள்களாக பல்வேறு விழிப்புணர்வு பிரசாரத்தில் போலீஸôர் ஈடுபட்டனர். காவல்துறையின் அறிவுறுத்தல்களையும், விழிப்புணர்வு பிரசாரங்களையும் சிலர் சரியாகவும், ஒழுங்காகவும் பின்பற்றாததனால் கரோனா தொற்று மேலும் பரவுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக வெள்ளிக்கிழமை (மே 14) முதல் முழு பொதுமுடக்க உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரியும் நபர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அரசின் கரோனா விழிப்புணர்வு அறிவுரைகளைப் பின்பற்றி சட்டப்பூர்வமான நடவடிக்கையில் இருந்து தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com