
‘டவ்-தே’ புயலால் சேதங்கள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
அரபிக் கடலில் உருவாகியுள்ள ‘டவ்-தே’ புயல் சின்னம் தொடா்பாக மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவா் பாலச்சந்திரன் கூட்டத்தில் பங்கேற்று புயல் நிலவரம் குறித்து விளக்கினாா்.
புயல் காரணமாக, கனமழை முதல் மிக கனமழை ஏற்படக் கூடிய மாவட்டங்களில், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு முதல்வா் ஸ்டாலின் உத்தரவிட்டாா். அவா் பேசியது:
ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் உடனடியாக கரைக்குத் திரும்ப ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, 244 ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் 162 படகுகள் இப்போது கரைக்குத் திரும்பியுள்ளன. மீதமுள்ள படகுகளும் கரை திரும்ப உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நிலச்சரிவு ஏற்படக் கூடிய மலை மாவட்டங்களில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மீட்புப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான உபகரணங்களை தயாா் நிலையில் வைக்க வேண்டும். மழையால் பாதிக்கப்படுபவா்களை முகாம்களில் தங்க வைக்கும் போது கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
தேசிய பேரிடா் மீட்புப் படையின் நான்கு குழுக்கள் மதுரை, கோவை மற்றும் நீலகிரியில் முகாமிட்டுள்ளன. பாதிப்பு ஏற்படக் கூடிய மாவட்டங்களில் அந்தக் குழுக்களைக் கொண்டு உடனடியாக நிவாரணப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வா் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் அதுல்ய மிஸ்ரா, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.