கரோனா நிவாரண நிதி: சேமித்துவைத்த ரூ.1,000 -ஐ வழங்கிய ஏழை சிறுவன்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தந்தையை  இழந்து வாடும் 12 வயது சிறுவன் தான் சேமித்து வைத்த பணத்தை முதல்வர் கரோனா நிவாரண  நிதியாக  ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
முதல்வர் கரோனா நிவாரண நிதி  வழங்கிய சிறுவன் நிரஞ்சன் குமார்
முதல்வர் கரோனா நிவாரண நிதி  வழங்கிய சிறுவன் நிரஞ்சன் குமார்

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தந்தையை  இழந்து வாடும் 12 வயது சிறுவன் தான் சேமித்து வைத்த பணத்தை முதல்வர் கரோனா நிவாரண  நிதியாக  ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

ராஜபாளையம் சம்மந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(40). இவர் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் ராமகிருஷ்ணன் உயிரிழந்தார். இவரது மனைவி கனகா(32) இவர்களது மகன் நிரஞ்சன் குமார்(12) ஆகிய இருவரும் தனியாக வசித்து வருகின்றனர்.

இவரது மனைவி கனகா அருகில் உள்ள மாணவர்களுக்கு டியூசன் எடுத்து தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார்‌. நிரஞ்சன் குமார் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.  இந்நிலையில் உலகம் முழுவதும் கரோனா அதிகரித்து வரும் நிலையில் குறிப்பாக தமிழகத்தில் தொற்று அதிகரித்து உயிர்ப்பலி அதிகமாகி வருகிறது.

இந்த சூழ்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கரோனா நிதி கொடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்‌.

இதையறிந்த நிரஞ்சன் குமார் தனது தகப்பனார் இறந்த நிலையில் அவரை பார்க்க வருபவர்கள் செலவுக்காக ரூ.100, 200 என கொடுக்கும் பணத்தை செலவழிக்காமல் சிக்கனப்படுத்தி சேமித்து வைத்துள்ளார். 

இதில் சைக்கிள் வாங்க வேண்டும் என நினைத்து வைத்திருந்த ரூ.1,000-யை ராஜபாளையம் வட்டாட்சியர் ரெங்கநாதனிடம் முதல்வர் நிதிக்காக வழங்கினார். வட்டாட்சியர் ரூ.1000 வழங்கிய நிரஞ்சனை பாராட்டி நன்றாக படிக்க வேண்டும் எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் செய்து தருகிறேன் எனக் கூறினார். 

சிறுவன் நிரஞ்சன் குமார் கூறியதாவது: உயிர்பலி அதிகரித்து வரும் இந்நிலையில்  பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முதலமைச்சர் நிதி கேட்டுள்ளார். என்னால் முடிந்த ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளேன். இதே போல் அனைவரும் தங்களால் ஆன  நிதியை தமிழக அரசுக்கு வழங்க முன்வர வேண்டும் என கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com