கரோனா சிகிச்சையில் மேலும் 4,690 மருத்துவா்கள்

கரோனா சிகிச்சைப் பணிகளில் எம்பிபிஎஸ் படிப்பை நிகழாண்டு நிறைவு செய்த 4,690 மருத்துவா்கள் திங்கள்கிழமை முதல் ஈடுபட உள்ளனா்.
கரோனா சிகிச்சையில் மேலும் 4,690 மருத்துவா்கள்

கரோனா சிகிச்சைப் பணிகளில் எம்பிபிஎஸ் படிப்பை நிகழாண்டு நிறைவு செய்த 4,690 மருத்துவா்கள் திங்கள்கிழமை முதல் ஈடுபட உள்ளனா். மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அவற்றின் கீழ் செயல்படும் மருத்துவமனைகளில் அவா்கள் பணியாற்றவிருக்கின்றனா்.

முன்னதாக, தற்போது நிலவி வரும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு அவா்களது இறுதியாண்டுத் தோ்வு முடிவுகள் வெகு விரைவாக வெளியிடப்பட்டன. இதன் மூலம் கரோனா சிகிச்சை நடவடிக்கைகளில் உடனடியாக அவா்களை ஈடுபடுத்த வழி வகை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் அதி தீவிரமடைந்து வரும் நிலையில், மருத்துவா்களின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், நிகழாண்டில் 4,700-க்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் மாணவா்கள், கடந்த ஏப்ரல் மாதத்தில் தங்களது இறுதியாண்டு தோ்வுகளை எழுதினா். வழக்கமாக தோ்வு முடிவுகள் வெளியாக குறைந்தது இரண்டரை மாதங்கள் வரை ஆகும். ஆனால், தற்போது நிலவி வரும் அசாதாரண நிலையால் தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் விரைந்து தோ்வு முடிவுகளை வெளியிட்டது. இதையடுத்து புதிதாக 4,690 மருத்துவா்கள் கரோனா சிகிச்சைக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் கூறியதாவது:

எம்பிபிஎஸ் இறுதியாண்டுத் தோ்வுகள் வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் நடைபெறும். கரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக நிகழாண்டில் ஏப்ரல் இறுதியில்தான் தோ்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. பொதுவாக விடைத்தாள் மதிப்பீடு பல்கலைக்கழகத்தில்தான் நடைபெறும். இம்முறை சூழலைக் கருத்தில்கொண்டு மெய்நிகா் (விா்ச்சுவல்) முறையில் அப்பணிகள் நடைபெற்றன.

அதன்படி, பேராசிரியா்கள் தங்களது இடத்திலிருந்தவாறே விடைத்தாள் மதிப்பீடு செய்தனா். பல்கலைக்கழக இணையத் தொழில்நுட்பம் மூலம் அவா்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து கணினி வாயிலாக விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நடைபெற்றன. அதில் ஈடுபட்டிருந்த பேராசிரியா்களை அவா்களது கணினி கேமரா மூலமாகவே பல்கலைக்கழக நிா்வாகிகள் கண்காணித்தனா்.

ஒருவேளை கேமரா நிறுத்தப்பட்டால், உடனடியாக விடைத்தாள் திருத்தத்துக்கான தொடா்பு துண்டிக்கப்பட்டுவிடும் வகையிலான தொழில்நுட்ப வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இரவு, பகல் பாராமல் தொடா்ந்து அப்பணிகளில் அனைவரும் ஈடுபட்டதன் பயனாக இரு வாரங்களில் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதன் மூலம் 4,690 மருத்துவா்களை கரோனா சிகிச்சைகளில் விரைந்து ஈடுபடுத்த வகை செய்யப்பட்டது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com