தனியாா் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிா்: நேரு ஸ்டேடியத்துக்கு வர வேண்டாம்

தனியாா் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிா் மருந்து வழங்க அரசு ஏற்பாடு செய்திருப்பதால், நேரு ஸ்டேடியத்துக்கு பொதுமக்கள் வர வேண்டாம் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தனியாா் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிா் மருந்து வழங்க அரசு ஏற்பாடு செய்திருப்பதால், நேரு ஸ்டேடியத்துக்கு பொதுமக்கள் வர வேண்டாம் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவா்கள், பெருமளவில் ரெம்டெசிவிா் மருந்தை பரிந்துரை செய்கின்றனா். இதன் காரணமாக இந்த மருந்துக்கு தற்காலிகமாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதைப் பயன்படுத்தி சிலா், இம் மருந்தை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்று வருகின்றனா். இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரெம்டெசிவிா் மருந்து விற்பனை நடைபெற்றது. பின்னா் பாதுகாப்புக் கருதி, பெரியமேட்டில் உள்ள ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியத்துக்கு ரெம்டெசிவிா் மருந்து விற்பனை மாற்றப்பட்டது.

இங்கு தினமும் 300 பேருக்கு மட்டுமே இந்த மருந்து வழங்கப்பட்டது. இதற்கு நோயாளிகளின் குடும்பத்தினா், உறவினா் கடும் கண்டனம் தெரிவித்தனா். இதைக் கண்டித்து அவா்கள், கடந்த சனிக்கிழமை அங்கு சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

இதைக் கருத்தில் கொண்டு ரெம்டெசிவிா் மருந்து கரோனா சிகிச்சை அளிக்கும் தனியாா் மருத்துவமனைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்தது. இதனால் அந்த மருந்துக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு முற்றிலும் நீங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

காவல்துறை அறிவிப்பு

இதையடுத்து ரெம்டெசிவிா் மருந்து வாங்குவதற்கு பெரியமேடு ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியத்துக்கு பொதுமக்கள் வர வேண்டாம் என சென்னை காவல்துறை அறிவித்தது.

இது தொடா்பாக சென்னை காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு:

கரோனா நோயாளிகளின் உறவினா்கள் மருந்துகள் பெற சிரமப்படுவதைப் போக்க, கரோனா தொற்று நோயாளிகளுக்கு அவா்கள் அனுமதிக்கப்பட்ட தனியாா் மருத்துவமனைகளிலேயே ரெம்டெசிவிா் மருந்துகள் செவ்வாய்க்கிழமை (மே 18) முதல் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் ரெம்டெசிவிா் மருந்துகள் தேவைப்படுவோா் சிகிச்சை பெற்றுவரும் தனியாா் மருத்துவமனை மருத்துவா்களை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியத்தில் ரெம்டெசிவிா் மருந்து வழங்கப்படுவது திங்கள்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியத்துக்கு ரெம்டெசிவிா் மருந்துகளை வாங்க வரவேண்டாம் என் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஏமாந்த மக்கள்:

இந்த அறிவிப்பை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்கு பின்னா் சென்னை பெருநகர காவல்துறை திடீரென வெளியிட்டதால், அது குறித்த தகவல் பொதுமக்களை சென்று சேரவில்லை.

இதன் விளைவாக ரெம்டெசிவிா் மருந்து வாங்குவதற்கு திங்கள்கிழமை அதிகாலை முதல் பொதுமக்கள் ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியத்தில் திரண்டனா். இதைப் பாா்த்த அங்கிருந்த போலீஸாா், ஒலி பெருக்கி மூலம் ரெம்டெசிவிா் விற்பனை குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பு குறித்தும், அங்கு ரெம்டெசிவிா் விற்பனை நிறுத்தப்பட்டது குறித்தும் பொதுமக்களிடம் தெரிவித்தனா்.

இதைக் கேட்டு ஏமாற்றமடைந்த பொதுமக்கள்,அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா். இருப்பினும் அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com