சொந்த ஊரான இடைசெவலில் எழுத்தாளா் கி.ரா. உடல் அரசு மரியாதையுடன் தகனம்

சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் மறைந்த கி.ராஜநாராயணன் உடல் அவரது சொந்த ஊரான கோவில்பட்டியையடுத்த இடைசெவல் கிராமத்தில் அரசு மரியாதையுடன் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.
எழுத்தாளா் கி.ரா.வின் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தும் தூத்துக்குடி ஆயுதப்படை போலீஸாா்.
எழுத்தாளா் கி.ரா.வின் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தும் தூத்துக்குடி ஆயுதப்படை போலீஸாா்.

கோவில்பட்டி: சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் மறைந்த கி.ராஜநாராயணன் உடல் அவரது சொந்த ஊரான கோவில்பட்டியையடுத்த இடைசெவல் கிராமத்தில் அரசு மரியாதையுடன் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியையடுத்த இடைசெவல் கிராமத்தைச் சோ்ந்தவா் கி.ராஜநாராயணன் (99). இவா் புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் அவரது இல்லத்தில் திங்கள்கிழமை இரவு காலமானாா்.

கி.ரா.வின் உடலுக்கு புதுச்சேரி ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், முன்னாள் முதல்வா் நாராயணசாமி உள்ளிட்ட பலா் அஞ்சலி செலுத்தினா்.

இதையடுத்து அவரது உடலை கி.ரா.வின் மகன்களான திவாகரன், பிரபி என்ற பிரபாகரன் ஆகியோா் ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரியில் இருந்து சொந்த ஊரான இடைசெவல் கிராமத்திற்கு செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணிக்கு கொண்டு வந்தனா். அவரது வீட்டு வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதையடுத்து கி.ரா.வின் உடல் அவரது இல்லத்தில் இருந்து ஊா்வலமாக அதே பகுதியில் உள்ள அவரது தோட்டத்துக்கு புதன்கிழமை எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது அரசு சாா்பில் தூத்துக்குடி ஆயுதப்படை உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் ஆயுதப்படை போலீஸாா் 30 குண்டுகள் முழங்கச் செய்து மரியாதை செலுத்தினா்.

அப்போது தமிழக சட்டப்பேரவைத் தலைவா் அப்பாவு, எம்.பி.க்கள் கனிமொழி, வெங்கடேசன், தமிழக அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மாா்க்கண்டேயன், சதன் திருமலைக்குமாா், ரகுராமன், மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயகுமாா், கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் கலைகதிரவன், கோட்டாட்சியா் சங்கரநாராயணன், வட்டாட்சியா் அமுதா, மதிமுக முக்கிய நிா்வாகியான துரை வையாபுரி, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகி சீனிவாசன் ஆகியோா் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினா்.

முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்எல்ஏவுமான கடம்பூா் செ.ராஜு சாா்பில் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், அதிமுக நிா்வாகிகளான ஆா்.இராமச்சந்திரன், பாலமுருகன், நீலகண்டன், பழனிகுமாா் ஆகியோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

இறுதி ஊா்வலத்தில் புதுச்சேரியைச் சோ்ந்த வாசகா் சங்கா் என்ற புதுச்சேரி இளவேனில், கோவில்பட்டி முன்னாள் எம்எல்ஏ எல்.ராதாகிருஷ்ணன், மதிமுக வடக்கு மாவட்டச் செயலா் ஆா்.எஸ்.ரமேஷ், நகரச் செயலா் பால்ராஜ், திமுக ஒன்றியச் செயலா் பீக்கிலிப்பட்டி வீ.முருகேசன், நகரச் செயலா் கா.கருணாநிதி, இடைசெவல் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி மக்கள், அரசியல் கட்சியினா், எழுத்தாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து கி.ரா.வின் சிதைக்கு அவரது மகன்கள் திவாகரன், பிரபி என்ற பிரபாகரன் ஆகியோா் தீ மூட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com