அகஸ்தியர் அருவி:சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியோர் மீது காவல் துறையில் புகார்

வனத்துறையினர் பாபநாசம், அகஸ்தியர் அருவியில் தண்ணீரை நிறுத்தியும், கல்யாண தீர்த்தத்தில் உள்ள அகஸ்தியர், உலோபாமுத்திரை சிலைகளை சேதப்படுத்தியும் உள்ளதாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியோர்
அகஸ்தியர் அருவிக்குச் செல்லும் தண்ணீரை மணல் மூட்டைகளை  அடுக்கி மடைமாற்றியதாக சமூக வலைதளங்களில் வெளியான படம்.
அகஸ்தியர் அருவிக்குச் செல்லும் தண்ணீரை மணல் மூட்டைகளை  அடுக்கி மடைமாற்றியதாக சமூக வலைதளங்களில் வெளியான படம்.


வனத்துறையினர் பாபநாசம், அகஸ்தியர் அருவியில் தண்ணீரை நிறுத்தியும், கல்யாண தீர்த்தத்தில் உள்ள அகஸ்தியர், உலோபாமுத்திரை சிலைகளை சேதப்படுத்தியும் உள்ளதாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியோர் மீது காவல் துறையில் புகாரளிக்கப்படும் என, மாவட்ட வன அலுவலர் கெளதம் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய அடையாளமாக விளங்குவது மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அகஸ்தியர் அருவி. தமிழகத்தில் பல சுற்றுலாத் தலங்கள் இருந்தாலும் இங்கு ஆண்டுமுழுவதும் தண்ணீர் விழுவதால் கோடைக்காலத்தில் சுற்றுலா செல்வோரின் முதன்மைத் தேர்வாக பாபநாசம்அகஸ்தியர் அருவி அமைந்துள்ளது.

அகஸ்தியர் அருவிக்கு மேல் அமைந்துள்ளது கல்யாண தீர்த்தம். இங்கு அகஸ்தியர் அமர்ந்து தவம் செய்தார், சிவனும், பார்வதியும் அகஸ்தியருக்கு இந்த இடத்தில்தான் கல்யாண திருக்கோலத்தில் காட்சியளித்தனர், இந்த இடத்துக்கு வந்துசென்றால் கல்யாண காரியம் கைகூடும், சித்ரா பெளர்ணமி நாளில் இங்கு சந்தனமழை பொழியும் என்பது மக்களின் நம்பிக்கை. கல்யாண தீர்த்தக் கரையில் சிவன் கோயில் முன் அகஸ்தியர், உலோபாமுத்திரை சிலைகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வந்தனர்.

கல்யாண தீர்த்தப் பகுதியில் அமைந்துள்ள குகையில் சிவனடியாரான கிருஷ்ணவேணி அம்மாள், 60 ஆண்டுகளுக்கும் மேலாக தனியாக வாழ்ந்து, அங்குள்ள சிவன் கோயிலில் தொண்டு செய்துவந்தார். அவர் 2011ஆம் ஆண்டு காலமானார்.

இத்தனைச் சிறப்புகள்கொண்ட அகஸ்தியர் அருவி, கல்யாண தீர்த்தப் பகுதி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதியில் அமைந்துள்ளதால் வனத்துறை அனுமதியுடன் மட்டுமே அங்கு செல்லமுடியும். அகஸ்தியர் அருவிக்கு மேல் கல்யாண தீர்த்தத்தில் அமைந்துள்ளஆபத்தான தடாகத்திலும் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் வந்து நீராடிச் செல்வர். தடாகத்தில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகள் சிலர் அடுத்தடுத்து நீரில் மூழ்கி உயிரிழந்ததால், கல்யாண தீர்த்தத்துக்குச் செல்ல வனத்துறையினர் தடைவிதித்தனர். இதனால், பக்தர்கள் மட்டும் பெளர்ணமி நாள்களில் வழிபட்டுச்சென்றனர்.

2019ஆம் ஆண்டு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சார்பில் வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பாபநாசம் வனச் சோதனைச்சாவடி அருகே "கயல்' என்ற பெயரில் தாமிரவருணி நதியில் உள்ள சிறப்புவாய்ந்த, அரிய வகை மீன் அருங்காட்சியகத்தைத் தொடங்கினர். மேலும், அகஸ்தியர் அருவிப் பகுதியில் வனக்குழுக்கள் சார்பில் அங்காடி அமைக்கப்பட்டது. பயணிகள் பயன்படுத்த வாகன நிறுத்தம், கழிப்பிடம், உடை மாற்றும் அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா தாக்கம் தொடங்கியதிலிருந்து சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லத் தடைவிதிக்கப்பட்டதால், அகஸ்தியர் அருவிக்கும் செல்ல பயணிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டது. இந்தத் தடை 15 மாதங்களாக நீடித்துவருகிறது.

இதனிடையே, 60 ஆண்டுகளில் இல்லாத வகையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த ஜனவரி 7 முதல் 18 வரை பலத்த மழை பெய்தது. இதனால், பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்தது; தாமிரவருணியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கல்யாண தீர்த்தத்தில் அமைந்திருந்த அகஸ்தியர், உலோபாமுத்திரை சிலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளப்பெருக்கு காரணமாக காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில், அகஸ்தியர் அருவி, கல்யாண தீர்த்தம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பக்தர்கள் செல்லத் தடைவிதிக்கப்பட்டிருந்ததால் அந்தச் சிலைகளைச் சீரமைப்பது தொடர்பாக யாரும் முயற்சி மேற்கொள்ளவில்லை.

வெள்ளத்தால் அகஸ்தியர் அருவிக்குச் செல்லும் பாதை பாதிக்கப்பட்டதுடன், அருவிப் பகுதியில் பாதுகாப்புக் கம்பிகள் அடித்துச் செல்லப்பட்டு, பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டது. அவற்றைச் சீரமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக, அருவியில் விழும் தண்ணீரை தற்காலிகமாக மடை மாற்றிவிட்டனர்.

இதுகுறித்த படங்களை சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இதனால், அகஸ்தியர் அருவியின் புனிதத்தைக் கெடுக்கும்வகையிலும், பக்தர்களின் மனதைப் புண்படுத்தும் வகையிலும் கல்யாண தீர்த்தத்தில் இருந்த அகஸ்தியர், உலோபாமுத்திரை சிலைகளை அகற்றி, அருவியின் நீரோட்டத்தைத் திசைதிருப்பியதாக உள்ளூர், வெளியூர் பக்தர்கள் வேதனையடைந்தனர். மேலும், சிலர் இதுகுறித்து மதத் துவேஷம், மக்களிடையே பீதி, தமிழக அரசின் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்பத் தொடங்கினர்.

இந்நிலையில், மடைமாற்றப்பட்ட தண்ணீரை வனத்துறையினர் அகஸ்தியர் அருவி வழியாகத் திருப்பிவிட்டனர்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் கெளதம் கூறியது: கல்யாண தீர்த்தப் பகுதியில் கடந்த ஜன. 17, 18ஆம் தேதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் அகஸ்தியர் சிலை அடித்துச் செல்லப்பட்டது. அதில் சேதமடைந்த உலோபாமுத்திரை சிலை கோயிலில் பத்திரமாக எடுத்துவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உயர்அதிகாரிகளுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அகஸ்தியர் அருவிக்குச் செல்லும் பாதை சேதமடைந்ததால், அதைச் சீரமைக்கவும், பாதிப்பை ஆய்வு செய்யவும் தற்காலிகமாக தண்ணீர் மடைமாற்றப்பட்டு, மீண்டும் அருவி வழியாகத் திறந்துவிடப்பட்டது. இப்போது அருவியில் தண்ணீர் விழுகிறது. 

வற்றாத ஜீவநதியான தாமிரவருணியில் தண்ணீரை நிறுத்த யாராலும் முடியாது. ஆனால்,  மக்களிடையே அமைதியைக் குலைத்து, பீதியை ஏற்படுத்தும் நோக்கில் சிலர் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்பியுள்ளனர். மேலும், தமிழக அரசின் மீதும் அவதூறு பரப்பியுள்ளனர். இதுகுறித்து ஆலயப் பாதுகாப்பு அமைப்பினர் என்னிடம் நேரடியாக விசாரித்தனர். உரிய விளக்கமளித்ததால் அவர்கள் திருப்தியடைந்தனர்.

சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பியோர் மீது வனத்துறை சார்பில் காவல் துறையில் புகாரளிக்கப்படும் என்றார் அவர்.

சுற்றுலாப் பயணிகளைக் கவர பல திட்டங்களைச் செயல்படுத்திவரும் வனத்துறை, இதுபோன்ற செயல்களில் வலிய ஈடுபடுவதாகக் கூறுவது நம்பத்தகுந்ததாக இல்லை. சிலர் வேண்டுமென்றே தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். சமூக வலைதளங்களில் உலாவரும் தகவல்களை பொதுமக்கள் அப்படியே நம்பி வேதனையடைய வேண்டாம் என வனத் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com