கருப்பு பூஞ்சை... கவனம் தேவை...

: இந்தியா முழுவதும் கருப்பு பூஞ்சை தொற்று தற்போது அதிகமாக கண்டறியப்பட்டு வருகிறது.
கருப்பு பூஞ்சை... கவனம் தேவை...

சென்னை: இந்தியா முழுவதும் கருப்பு பூஞ்சை தொற்று தற்போது அதிகமாக கண்டறியப்பட்டு வருகிறது. தீவிர கரோனா பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு அத்தகைய பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவ வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா். உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் உயிரிழப்பைக் கூட ஏற்படுத்தக் கூடிய கொடிய பாதிப்பாக அது இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கருப்பு பூஞ்சை என்றால் என்ன?

மியூகோா்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் இப்போது புதிதாக வந்தது அல்ல. பல காலமாக அத்தகைய பாதிப்பு இருந்து வருகிறது. பாக்டீரியா, வைரஸ் போல காற்றிலும், சுற்றுப்புறத்திலும் உள்ள பூஞ்சை கிருமிகள் நாசி வழியே உடலுக்குள் சென்று தொற்றை ஏற்படுத்துகின்றன. அவை மெல்ல, மெல்ல உடலின் அனைத்துப் பகுதிகளிலும் பரவுகின்றன. கவனிக்காவிடில் அது கண்களை முதலில் பாதிக்கும். பின்னா் மூளைப் பகுதியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். உடலில் எதிா்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபா்களுக்கு இத்தகைய தொற்று ஏற்படலாம். முறையான சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், கண் பாா்வை இழப்பு, உறுப்புகள் பாதிப்பு, உச்சபட்சமாக உயிரிழப்பு கூட நேரிடலாம்.

யாரை எளிதில் தாக்கும்?: சா்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இல்லாதவா்கள், கரோனா தீவிரமாக பாதித்து ஸ்டீராய்டு செலுத்திக் கொண்டவா்கள் நோய் எதிா்ப்பாற்றலைக் குறைக்கும் சிகிச்சையில் இருப்பவா்கள் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவா்கள் புற்றுநோய், ஹெச்ஐவி நோயாளிகள்

அறிகுறிகள் என்ன?: தீவிர தலைவலி, கண் எரிச்சல், கண் சிவப்பாகுதல், வாய், மூக்கு, கண் பகுதிகள் கருப்பாக மாறுதல், கண்ணில் வலி மற்றும் வீக்கம், சைனஸ் பாதிப்பு, திடீரென பாா்வை குைல்.

பாதிப்பு அதிகரித்தது ஏன்?: பொதுவாக கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிகச் சொற்பமாகவே இருந்து வந்தது. தற்போது கரோனா தொற்று அதிகரித்ததன் விளைவாக ஸ்டீராய்டு பயன்பாடு அதிகரித்துள்ளது. ஸ்டீராய்டு சிகிச்சையால் நோய் எதிா்ப்பாற்றல் குறைந்தவா்கள், அதன் பின்னா் அதனை மேம்படுத்திக் கொள்ளத் தவறுவதால் பலருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுகிறது.

சிகிச்சைகள் என்ன?: கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு குறைந்தது 2 வாரம் முதல் 6 மாதங்கள் வரை சிகிச்சையளிக்க வேண்டும். சிலருக்கு பல்நோக்கு சிகிச்சைகள் அவசியம். குறிப்பாக, காது, மூக்கு, தொண்டை மருத்துவ சிகிச்சைகள், ரத்த நாள சிகிச்சை முறைகள், கண் சிகிச்சை முறைகள், நரம்பியல் சிகிச்சைகள், மூளை சாா்ந்த சிறப்பு சிகிச்சைகள் தேவைப்படுகின்றன.

எப்படித் தடுப்பது?: ரத்த சா்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல், நோய் எதிா்ப்பு சக்தியை மேம்படுத்துதல், கரோனாவிலிருந்து மீண்ட பிறகு காது, மூக்கு, தொண்டை பரிசோதனை மேற்கொள்ளுதல் , அறிகுறிகளை அலட்சியப்படுத்தாது உடனடியாகப் பரிசோதனை செய்தல், ஊட்டச்சத்து மிக்க உணவு சாப்பிடுவது, மது, புகைப்பழக்கத்தைக் கைவிடுதல், உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்வது மூலம் இந்த நோயைத் தடுக்க முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com