பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரியில் 300 ஆக்சிஜன் படுக்கைகள்: அமைச்சர் தகவல்

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில்  300 ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கைகள் வரும் வெள்ளிக்கிழமை செயல்பாட்டுக்கு வரும் என    வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தகவல் தெரிவித்தார்
பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரியில் 300 ஆக்சிஜன் படுக்கைகள்: அமைச்சர் தகவல்

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில்  300 ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கைகள் வரும் வெள்ளிக்கிழமை செயல்பாட்டுக்கு வரும் என  வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தகவல் தெரிவித்தார். 

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பத்திரிகையாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாமை துவக்கி வைத்து, கலெக்டர் சி.கதிரவன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு கூட்டம் நடத்தினார்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சு.முத்துசாமி கூறியதாவது:

தற்போதைய நிலையில், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கை வசதி சற்று குறைவாகவே உள்ளன. அதை அதிகரிக்க, ஈரோடு அரசு மருத்துவமனையில், 131 ஆக்சிஜன் இணைப்பு படுக்கை, 250 என உயர்த்தப்படுகிறது. ஓரிரு நாளில், அவை செயல்பாட்டுக்கு வரும்.

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 550 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி, 650 என உயர்த்தியுள்ளோம். அவ்வளாகத்தில் கூடுதலாக ஏற்படுத்தப்பட்ட 300 ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கைகள் வரும் வெள்ளிக்கிழமை செயல்பாட்டுக்கு வரும்.

அடுத்த ஒரு வாரத்தில் மேலும், 300 ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கை, பயன்பாட்டுக்கு வரும். ஜூன் 20க்குள் மேலும் 200 ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கை பயன்பாட்டுக்கு வரும். இதன்மூலம் 1,550 படுக்கை வசதி, பெருந்துறையில் இருக்கும்.

ஈரோடு மட்டுமின்றி அருகே உள்ள மாவட்டத்தினருக்கும் படுக்கை வசதி இல்லை, ஆக்சிஜன் இணைப்பு கிடைக்கவில்லை என்ற புகார் வராமல் பார்க்கப்படும்.

ஆக்சிஜன் தேவைப்படாமல், கொரோனாவுக்காக சிகிச்சை பெற, 3,500 படுக்கை பள்ளி, கல்லுாரிகளில் ஏற்படுத்தி, 1,000 படுக்கைகள் தவிர மற்றவை காலியாக உள்ளன. வீடுகளில் தனிமைப்படுத்த வசதி இல்லாதவர்கள், மருத்துவ சிகிச்சை தேவை என்போர் அங்கு சிகிச்சையில் உள்ளனர்.

அதுபோல, அந்தியூர், சத்தியமங்கலம், கோபி, பவானி அரசு மருத்துவமனைகளில், தலா 100 படுக்கை ஆக்சிஜன் வசதியுடன் தரம் உயர்கிறது. இருப்பினும் அங்கு குறிப்பிட்ட படுக்கைகளில் மட்டும் கரோனா நோயாளிகள் தங்க வைக்கப்படுவர். மற்ற படுக்கைள், பிற கட்டடங்கள், பிற நோயாளிகளுக்கு முன்னுரிமையில் வழங்கி, சிகிச்சை தொடரும் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com