தமிழகத்தில் நாள்தோறும் 2 லட்சம் லிட்டர் பால் அதிகமாகக் கொள்முதல்: அமைச்சர் நாசர் தகவல்

தமிழகம் முழுவதும் பொதுமுடக்க காலத்தில் விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நாள்தோறும் 2 லட்சம் லிட்டர் பால் அதிகமாகக் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
ஆவின் பாலகங்களில் ஆய்வு செய்யும் பால்வளத்துறை அமைச்சர் நாசர்
ஆவின் பாலகங்களில் ஆய்வு செய்யும் பால்வளத்துறை அமைச்சர் நாசர்

திருப்பூர்: தமிழகம் முழுவதும் பொதுமுடக்க காலத்தில் விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நாள்தோறும் 2 லட்சம் லிட்டர் பால் அதிகமாகக் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். 

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆவின் பாலகங்களில் பால்வளத்துறை அமைச்சர் நாசர், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது பால் மற்றும் பால்சார்ந்த உணவு பொருள்களின் தரம் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார். இதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பொதுமுடக்க காலத்தில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கான உணவு, காய்கறித் தொகுப்பு, குடிநீர், பால், மருத்துவ வசதிகள் முழுமையாக கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்கள், உள்ளாட்சித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் களப்பணியாற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதனடிப்படையில் மாவட்டந்தோறும் சென்று ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. நடமாடும் வாகனங்கள் மூலமாக வீடுகளுக்குச் சென்று காய்கள் விற்பனை செயல்படுத்தி வருகிறது. மேலும், மாவட்டந்தோறும் மருத்துவக் குழுக்களை வைத்து வீடு வீடாகச் சென்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதே போல விவசாயிகளிடம் இருந்து முழுபாலையும் கொள்முதல் செய்து சரியான முறையில் பதப்படுத்தி விநியோகம் செய்யப்படுகிறது. இதன்படி கடந்த திங்கள்கிழமை மாலை சென்னை புறநகர் தாம்பரம், அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழகம் முழுவதும் விவசாயிகளிடம் இருந்து நாள்தோறும் 38 லட்சம் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதில் 28 லட்சம் பால் சென்னை போன்ற பெருநகரங்களில் விநியோகம் செய்யப்படுகிறது.

மேலும், தற்போது பொதுமுடக்க காலத்தில் விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்றதன் அடிப்படையில் 2 லட்சம் லிட்டர் அதிகமாக கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதே வேளையில் ஆவின் பால் விற்பனையும் தற்போது அதிகரித்துள்ளது என்றார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன், திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் க.செல்வராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com