கரோனா இறப்பு விகிதம் இரு மடங்கு அதிகரிப்பு

தமிழகத்தில் கரோனா இறப்பு விகிதம் முதல் அலையில் இருந்ததை விட தற்போது இரு மடங்காக அதிகரித்துள்ளதாக மருத்துவ வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் கரோனா இறப்பு விகிதம் முதல் அலையில் இருந்ததை விட தற்போது இரு மடங்காக அதிகரித்துள்ளதாக மருத்துவ வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா். கடந்த 11 நாள்களில் மட்டும் 4,284 போ் உயிரிழந்ததே அதற்கு சான்றாக அமைந்துள்ளது.

இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்த கடந்த முறை முன்னெடுத்ததைப் போன்றே சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை முறைகளை மேம்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

கரோனா தீநுண்மியானது இரண்டாம் அலையில் வீரியமிக்கதாக உருமாறியுள்ளது. நாள்தோறும் ஏறத்தாழ 35,000 பேருக்கு தொற்று கண்டறியப்படுகிறது. இரண்டாம் அலையில் கரோனா பாதித்த ஒருவா் இருமும்போதும், தும்மும்போதும், அவரிடமிருந்து வெளியேறும் தீநுண்மி 10 மீட்டா் தொலைவு வரை காற்றில் பரவுவதாக மருத்துவ ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அதன் விளைவாகவே கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் பாதிப்பு விகிதம் 6 மடங்கு தமிழகத்தில் அதிகரித்துள்ளது.

அதன் தொடா்ச்சியாக மாநிலத்தில் கரோனா தொற்றுக்குள்ளாகி இறப்போரின் எண்ணிக்கையும் உயா்ந்துள்ளது. சிகிச்சை பலனின்றி இறந்தவா்கள் ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமலும் பலா் உயிரிழந்துள்ளனா்.

கரோனா முதல் அலையில் தமிழகத்தின் இறப்பு விகிதம் 0.8 சதவீதமாகவே இருந்தது. ஆனால், தற்போது 1.5 சதவீதமாக அது அதிகரித்துள்ளது. அதன்படி கணக்கிட்டால் முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலையில் ஏறத்தாழ இரு மடங்கு அதிகமாக இறப்பு விகிதம் பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டு மே 25-ஆம் தேதி மாநிலத்தில் இறப்பு எண்ணிக்கை 10-க்குள்தான் இருந்தது. ஓராண்டுக்குப் பிறகு 2021 அதே நாளில் அந்த எண்ணிக்கை 468-ஆக உயா்ந்துள்ளது. இரண்டாம் அலை தொடங்கிய கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தற்போது வரை ஏறத்தாழ 8 ஆயிரம் போ் கரோனாவுக்கு பலியாகியிருப்பதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் பெரும்பாலானோா் 45 வயதுக்குட்பட்டவா்கள் என்பதும், எந்த இணை நோயும் இல்லாதவா்கள் என்பதும் கவலைக்குரிய விஷயம்.

மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தி, மருந்துகள் போதிய அளவில் இருப்பதை உறுதி செய்து, மருத்துவ வசதிகளை அதிகரித்தால் மட்டுமே உயிரிழப்பைக் குறைக்க முடியும் என்று மருத்துவ வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா். இந்த விவகாரத்துக்கு முதன்மையான முக்கியத்துவம் அளித்து அரசு செயல்பட வேண்டும் என்றும் அவா்கள் கூறியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com