தம்மம்பட்டியில் மழை: 2 அடி உயர்த்திய சாலையால் பள்ளமாய் போன வீடுகளுக்குள் புகுந்தது மழைநீர்!

தம்மம்பட்டியில் மேற்பரப்பை சுரண்டாமல், உயர்த்தி போடப்பட்ட தார்ச்சாலையால், பள்ளமாய் போன வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.
தம்மம்பட்டியில் மழை: 2 அடி உயர்த்திய சாலையால் பள்ளமாய் போன வீடுகளுக்குள் புகுந்தது மழைநீர்!



தம்மம்பட்டி:  தம்மம்பட்டியில் மேற்பரப்பை சுரண்டாமல், உயர்த்தி போடப்பட்ட தார்ச்சாலையால், பள்ளமாய் போன வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

சேலம் மாவட்டம், சிறப்புநிலை பேரூராட்சியில்,  8 ஆவது வார்டு மாரியம்மன் கோவிலில் இருந்து குரும்பர் தெரு தொடக்கம் வரையும், கள்ளிப்பாதையை இணைத்தும் ஒரு கி.மீ. தூரத்துக்கு ரூ.10 லட்சத்தில் தார்ச்சாலை, கடந்த பிப்ரவரி மாதம் அவசர அவசரமாக போடப்பட்டது. அந்த சாலை ஏற்கெனவே உயரம் என்பதால், சாலை அமைக்கும் போது, மேற்பரப்பை சுரண்டிவிட்டுத்தான் சாலை போட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கூறினார்கள். 

ஆனால், மேற்தள கட்டுமானத்தை சுரண்டி எடுக்காமல், இரவோடு இரவாக, அதன் மீதே தார்ச்சாலை அமைத்துவிட்டனர். அதனால், சாலையின் உயரம் 2 அடி உயர்ந்துவிட்டது. பெரும்பாலான வீடுகள், சாலையை விட பள்ளமாகிவிட்டது. அதனால், மழைக்காலங்களில், மழைநீர் வீட்டிற்குள் புகும் நிலை ஏற்பட்டு பாதிப்பு ஏற்படும் என மக்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், தம்மம்பட்டியில் செவ்வாய்க்கிழமை  மாலை சுமார் ஒரு மணி நேரம் கோடை மழை கொட்டித் தீர்த்தது. அப்போது, குரும்பர்தெருவில் உயர்த்தி போடப்பட்ட சாலையை விட பள்ளமாய் போன வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. அப்போது, மழைநீர் உள்ளே வீட்டுக்குள் புகாமல் இருக்க, வீட்டுமுன்பாக மணல் மூட்டைகளைப் போட்டும், மண் கொட்டி மேடு அமைத்தும், மழைநீர் புகாமல், குடியிருப்புவாசிகள், தடுத்தனர்.

சாலை போடும் போது, மேற்தள கட்டுமானத்தை சுரண்டி எடுத்துவிட்டு பின் அதே உயரத்திற்குதான் சாலை அமைக்கப்பட வேண்டும் என அரசு உத்தரவு உள்ளது. அந்த உத்தரவை ஒப்பந்ததாரர் மதிக்காமலும், அதிகாரிகள் கண்காணிக்காமலும் விட்டதால், வரும் மழைக்காலங்களில், இப்பகுதியில் பள்ளமாய் போன வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து பெரும் பாதிப்பைத்தான் ஏற்படுத்தும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com