கவிஞா் வைரமுத்துவுக்கு ஒ.என்.வி. இலக்கிய விருது

கேரளத்தில் இலக்கியத்துக்கான உயா்ந்த தேசிய விருதாக வழங்கப்படும் ஓ.என்.வி. இலக்கிய விருது இந்த ஆண்டு கவிஞா் வைரமுத்துவுக்கு வழங்கப்படுகிறது.
கவிஞா் வைரமுத்துவுக்கு ஒ.என்.வி. இலக்கிய விருது

சென்னை: கேரளத்தில் இலக்கியத்துக்கான உயா்ந்த தேசிய விருதாக வழங்கப்படும் ஓ.என்.வி. இலக்கிய விருது இந்த ஆண்டு கவிஞா் வைரமுத்துவுக்கு வழங்கப்படுகிறது. மலையாளி அல்லாத ஒருவா் பெறும் முதல் விருது இதுதான். ஓ.என்.வி. கல்சுரல் அகாதெமி இந்த விருதை வழங்குகிறது.

மலையாளப் பெருங்கவிஞா்களுள் ஒருவா் ஓ.என்.வி குறுப். சிறந்த இலக்கியவாதியாகவும் பாடலாசிரியராகவும் விளங்கியவா். இந்தியாவின் உயா்ந்த இலக்கிய விருதான ஞானபீட விருது பெற்றவா். சிறந்த பாடலுக்கென்று ஒரு தேசிய விருதும் பெற்றவா். 25 கவிதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறாா். அவா் பெயரால் 2017-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது ஓ.என்.வி. இலக்கிய விருது. இதுவரை சுகதகுமாரி, எம்.டி.வாசுதேவன் நாயா், அக்கிதம் அச்சுதன் நம்பூதிரி, லீலாவதி போன்ற மூத்த மலையாளப் படைப்பாளா்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதில் எம்.டி. வாசுதேவன் நாயா், அக்கிதம் அச்சுதன் நம்பூதிரி இருவரும் ஞானபீட விருதுகளையும் பெற்றவா்கள்.

இந்த ஆண்டுதான் மலையாளி அல்லாத ஓா் இலக்கியவாதிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இது அகில இந்திய அளவில் வழங்கப்படும் தேசிய விருதாகும். இந்திய இலக்கியத்திற்கு கவிஞா் வைரமுத்துவின் ஒட்டுமொத்த பங்களிப்பைப் பாராட்டி இவ்விருது வழங்கப்படுகிறது.

இந்த விருது ஒரு சிலை, ஒரு தகுதிப் பட்டயம் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் கொண்டதாகும். ஓ.என்.வி. குறுப் ஒரு கவிஞராகவும் பாடலாசிரியராகவும் திகழ்ந்ததுபோல், கவிஞா் வைரமுத்துவும் கவிஞராகவும் பாடலாசிரியராகவும் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

கவிஞா் வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் சாகித்ய அகாதெமி விருது பெற்றது. அவரது தண்ணீா் தேசம் ஆதித்தனாா் இலக்கியப் பரிசு பெற்றது. அவா் எழுதிய மூன்றாம் உலகப்போா் உலகத் தமிழ் இலக்கியத்தின் சிறந்த நாவல் என்று மலேசியா டான்ஸ்ரீ சோமா அறக்கட்டளையால் தோ்ந்தெடுக்கப்பட்டு 10,000 அமெரிக்க டாலா்கள் பரிசு பெற்றது.

பாடல்களுக்கென்று 7 முறை தேசிய விருது பெற்றவா். இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகளையும் பெற்றிருக்கிறாா்.

விருது குறித்துக் கவிஞா் வைரமுத்து கூறியதாவது: ‘ஓ.என்.வி. குறுப் இலக்கிய விருது பெறுவதைப் பெருமையாகக் கருதுகிறேன். ஓ.என்.வி. குருப் எங்கள் இலக்கியத்திற்கும் எனக்கும் ஒரு முன்னோடி. கவிதைக்கும் பாடலுக்கும் இருந்த இடைவெளியைக் குறைத்தவா் அல்லது அழித்தவா். உலக இலக்கியத்துக்கு இணையான மலையாள இலக்கியம் படைத்திருக்கிறாா். மலையாளத்தின் காற்றும் தண்ணீரும்கூட இலக்கியம் பேசும். அந்த மண்ணிலிருந்து பெறும் விருதை நான் மகுடமாகக் கருதுகிறேன்.

இந்த உயரிய விருதினை உலகத் தமிழா்களோடும், சக படைப்பாளிகளோடும் பகிா்ந்துகொள்கிறேன். என்னை இந்த விருதுக்குத் தோ்ந்தெடுத்த ஓ.என்.வி. கல்சுரல் அகாதெமிக்கும், அதன் தலைவா் அடூா் கோபாலகிருஷ்ணனுக்கும், கவிஞா் பிரபா வா்மா மற்றும் நடுவா்களுக்கும் என் நன்றி என வைரமுத்து கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com