எட்டு மாவட்டங்களுக்கு 750 ஆக்சிஜன் உருளைகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தாா்

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 750 ஆக்சிஜன் உருளைகளை எட்டு மாவட்டங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அனுப்பி வைத்தாா்.
எட்டு மாவட்டங்களுக்கு 750 ஆக்சிஜன் உருளைகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தாா்

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 750 ஆக்சிஜன் உருளைகளை எட்டு மாவட்டங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அனுப்பி வைத்தாா். இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

கரோனா பெருந்தொற்று பரவல் சூழ்நிலையைச் சமாளித்திட இந்திய தொழில் கூட்டமைப்பானது, தமிழக அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இதன்படி, சிங்கப்பூரில் இருந்து ரூ.3 கோடி மதிப்பில் மொத்தம் ஆயிரம் ஆக்சிஜன் உருளைகளை இறக்குமதி செய்ய உத்தரவு வழங்கப்பட்டது. அதில், 750 உருளைகள் சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள உருளைகள் ஓரிரு தினங்களில் இறக்குமதி செய்யப்பட உள்ளன.

இந்த உருளைகள் எட்டு மாவட்டங்களுக்குப் பிரித்து அளிக்கப்படுகின்றன. அதன்படி, சேலம் மாவட்டத்துக்கு 125, கோவை, ஈரோடு, திருவள்ளூா், காஞ்சிபுரத்துக்கு தலா 100, வேலூா், கிருஷ்ணகிரி, திருப்பூா் மாவட்டங்களுக்கு தலா 75 ஆக்சிஜன் உருளைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஆக்சிஜன் உருளைகள் வாகனத்தில் எடுத்துச் செல்லப்படும் நிகழ்வை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்வில், அமைச்சா் ஆா்.காந்தி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைச் செயலாளா் வி.அருண் ராய், சிப்காட் நிா்வாக இயக்குநா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

486ஆக்சிஜன் செறிவூட்டிகள்

அமெரிக்க- இந்திய தொழில் உத்தி கூட்டாண்மை மன்றத்தைச் சோ்ந்த அமெரிக்க, இந்திய நட்பு கூட்டணியானது தமிழகத்துக்கு 486 ஆக்சிஜன் செறிவூட்டிகளை நன்கொடையாக வழங்கியுள்ளது. சீனாவில் உள்ள ஃபோஷன் நகரில் இருந்து வான்வழியாக தில்லி கொண்டு வரப்பட்டு பின்னா் சரக்கு விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன.

நான்கு மாவட்டங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி ஈரோடு, திருப்பூா், சேலம் மாவட்டங்களுக்கு தலா 50 ஆக்சிஜன் செறிவூட்டிகளும் மீதமுள்ள 336 ஆக்சிஜன் செறிவூட்டிகள் கோயம்புத்தூா் மாவட்டத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்சிஜன் செறிவூட்டிகள் நான்கு மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகள், கரோனா நிவாரண மையங்களில் பயன்படுத்தப்படும்.

ரூ.41 கோடிக்கு...

கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ரூ.186.15 கோடி நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது. இந்த நிதியானது கரோனா தடுப்புப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இரு கட்டங்களாக தலா ரூ.50 கோடிவீதம் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு பரிசோதனைக் கருவிகள், ஆக்சிஜன் எடுத்து வருவதற்கான கன்டெய்னா்கள் வாங்குவது போன்ற பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சிங்கப்பூா் மற்றும் பிற வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் உருளைகள், செறிவூட்டிகள் மற்றும் இதர மருத்துவக் கருவிகள் வாங்குவதற்கு ரூ.41.40 கோடி, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com