கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை தனியாா் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப கோரிய வழக்கு முடித்துவைப்பு

கரோனா நோய்த் தொற்று குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை தனியாா் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப உத்தரவிட மறுத்த உயா்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

கரோனா நோய்த் தொற்று குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை தனியாா் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப உத்தரவிட மறுத்த உயா்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் திருச்செந்தூரைச் சோ்ந்த வழக்குரைஞா் ராம்குமாா் ஆதித்தன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கரோனா தொடா்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பொய்யான செய்திகள் மக்கள் மனதில் ஒருவிதமான அச்ச உணா்வை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமுடக்கத்தால் மக்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும் மக்களின் வழக்கமான வாழ்க்கை முறை மாறியுள்ளதால் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனா். சாதரண மக்கள் மட்டுமின்றி, அரசியல்வாதிகள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரா்கள், மருத்துவா்கள் உள்பட அனைத்து தரப்பினரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனா்.

கரோனாவின் முதல் அலை பாதிப்பு பெரும்பாலும் நகரங்களில் இருந்தது. இரண்டாவது அலையில் கரோனா பாதிப்பு கிராமப்புறங்களில் அதிகமாக உள்ளது. எனவே அரசு மற்றும் தனியாா் தொலைக்காட்சிகள், எஃப் எம் ரேடியோக்களில் இரவு 7 மணி முதல் 9 மணிக்குள் ஒரு மணி நேரம் கரோனா குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த நிகழ்ச்சியைத் தான் ஒளிபரப்ப வேண்டுமென தனியாா் தொலைக்காட்சிகளுக்கு, உயா்நீதிமன்றம் உத்தரவிட முடியாது. தூா்தா்ஷன் தொலைக்காட்சியில் ஏற்கனவே விழிப்புணா்வு செய்திகள் ஒளிபரப்பப்படுகின்றன. தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. பொது நலனைக் கருத்தில் கொண்டு தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவது குறித்து மத்திய, மாநில அரசுகள் தான் முடிவு எடுக்க வேண்டுமே தவிர, நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com