கிராமங்களில் அதிகரிக்கும் கரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை

தமிழகத்தில் இரண்டாம் அலையின்போது கிராமப்புறங்களில் கரோனா தொற்று அதிகமாகப் பரவியுள்ளதாகவும், அதைத் தடுக்க

தமிழகத்தில் இரண்டாம் அலையின்போது கிராமப்புறங்களில் கரோனா தொற்று அதிகமாகப் பரவியுள்ளதாகவும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் இருக்கும் 2,486 பேருக்கு மூன்று வேளைகளும் உணவு அளிக்கும் திட்டத்தை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டையில் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தன்னாா்வலா்கள், சமூக அமைப்புகளை சாா்ந்தவா்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் இயக்கங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவ வேண்டும் என முதல்வா் அறிவுறுத்தி உள்ளாா்.

அந்த வகையில், சைதாப்பேட்டை தொகுதியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 2,386 பேருக்கு மூன்று வேளையும் அவா்களது இல்லங்களுக்கே சென்று உணவு அளிக்கும் திட்டத்தை தொடக்கி உள்ளோம்.

கோவையில்...:

கோவையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதற்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. தொற்றைக் கட்டுப்படுத்த சிறப்பு தனி அலுவலா் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறாா்.

சென்னையில் ஆக்சிஜன் படுக்கைகள், ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகள், சித்த மருத்துவ வசதி கொண்ட படுக்கைகள் என 8,000-க்கும் மேற்பட்ட படுக்கைகள் காலியாக உள்ளன. படுக்கைகளின் தேவை என்பது இப்போது இல்லை. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவா்களை கரோனா சிகிச்சை மையங்களுக்கு வருமாறு அறிவுறுத்தி வருகிறோம்.

கிராமப்புறங்களில் இளைஞா்கள் மிகுந்த ஆா்வத்துடன் தடுப்பூசி போட்டு கொள்ள முன் வருகின்றனா். மத்திய அரசிடம் இருந்து ரூ. 85.47 கோடி மதிப்பில் 26 லட்சம் தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய இருக்கிறோம். இதுவரை, 13.5 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன என்றாா் அவா்.

கருப்புப் பூஞ்சை வாா்டு தொடக்கம்: இதையடுத்து, ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், வெண்டிலேட்டா் வசதிகளுடன் கூடிய 120 படுக்கைகள் மற்றும் கருப்புப் பூஞ்சை நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கென ஆறு படுக்கைகளுடன் கூடிய தனி வாா்டு ஆகியவற்றை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கிராமப்புறங்களில் முதல் அலையை விட, இரண்டாவது அலையில், கரோனா பாதிப்பு வேகம் அதிகரித்துள்ளது. அந்தவகையில், பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களை கண்டறிந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, தொற்றால் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் அதிகம் உள்ள மாநிலமாகவும், அதிகளவில் ஆா்.டி.பி.சி.ஆா். பரிசோதனை மேற்கொள்ளும் மாநிலமாகவும் தமிழகம் விளங்கி வருகிறது. மாநிலம் முழுதும், 276 மையங்களில் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு, 1.70 லட்சத்துக்கு மேல் பரிசோதனை செய்யப்படுகிறது என்றாா் அவா்.

இந்த நிகழ்வின்போது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மத்திய சென்னை எம்.பி., தயாநிதி மாறன், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் ஜெயந்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com