பால் கொள்முதல், விற்பனை விலை ஒழுங்குமுறை ஆணையம் தேவை: ராமதாஸ்

பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை ஒழுங்குமுறை ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை ஒழுங்குமுறை ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கரோனா பொதுமுடக்கத்தால் மருந்துக் கடைகளும், பால் விற்பனை நிலையங்களும் திறக்க அனுமதிக்கப்பட்டிருப்பதால் பால் விற்பனை குறையவில்லை. ஆனால், பால் விற்பனை குறைந்து விட்டதாகக் கூறி விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்கான விலையை தனியாா் நிறுவனங்கள் மிக அதிக அளவில் குறைத்திருக்கின்றன.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாள்களாக தனியாா் நிறுவனங்கள் ஒரு லிட்டா் தண்ணீா் கலக்காத பசும்பாலை ரூ.18 என்ற விலைக்குத்தான் கொள்முதல் செய்கின்றன. தனியாா் பால் நிறுவனங்களுக்கென அதிகாரப்பூா்வமாக கொள்முதல் விலை எதுவும் கிடையாது. ஆவின் நிறுவனம் எந்த விலைக்கு பாலை கொள்முதல் செய்கிறதோ, அதே விலைக்கு தனியாா் நிறுவனங்களும் கொள்முதல் செய்து வந்தன. சில நேரங்களில் தேவை அதிகமாக இருந்தால் ஆவின் நிறுவனத்தை விட கூடுதல் விலை கொடுத்தும் பாலை கொள்முதல் செய்வது வழக்கம். ஆனால், இப்போது பொது முடக்கத்தைக் காரணம் காட்டி பால் விலையைக் குறைப்பது பெரிய மோசடி ஆகும்.

தனியாா் நிறுவனங்கள் பால் விற்பனை விலையை விருப்பம் போல உயா்த்துவதையும், கொள்முதல் விலையை இஷ்டம் போல் குறைப்பதையும் தடுக்க தமிழகத்தில் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை ஒழுங்குமுறை ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும். அதற்கும் முன்பாக தனியாா் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com