விடுதலைப் போரில் தமிழகம்: புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்தார் முதல்வர்
விடுதலைப் போரில் தமிழகம்: புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்தார் முதல்வர்

விடுதலைப் போரில் தமிழகம்: புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்தார் முதல்வர்

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் தமிழக தியாகிகள் வரலாற்றைச் சிறப்பிக்கும் “விடுதலைப் போரில் தமிழகம்” என்ற மாபெரும் புகைப்படக் கண்காட்சியை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் தமிழக தியாகிகள் வரலாற்றைச் சிறப்பிக்கும் “விடுதலைப் போரில் தமிழகம்” என்ற மாபெரும் புகைப்படக் கண்காட்சியை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (1.11.2021) சென்னை, கோயம்பேடு புறநகர பேருந்து நிலைய வளாகத்தில் 75வது சுதந்திரத் திருநாள் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், இந்திய விடுதலைப் போரில் இன்னுயிர் ஈந்தும், இடுக்கண்கள் ஏற்றும் சொல்லொணாத் தொல்லைகட்கு ஆட்பட்ட தீரத் தியாகிகளின் வீரப் பெருமிதங்களை நினைவுகூர்ந்து போற்றும் வகையில் “விடுதலைப் போரில் தமிழகம்” என்ற மாபெரும் புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்தார். 

சுதந்திர தினத்தின் 75ஆம் ஆண்டு விழா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபின் முதன்முறையாகக் கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்திட, தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அத்துடன், காமராஜர் சாலையில் காண்போரை கவரும் வகையில் கம்பீரமாக நிறுவப்பட்டுள்ள 75ஆம் ஆண்டு சுதந்திர தின நினைவுத் தூணையும் முதல்வர் அன்றையதினம் திறந்து வைத்தார்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, நாட்டின் விடுதலைக்கு அரும்பாடுபட்ட தலைவர்களைப் போற்றும் வகையிலும், குறிப்பாக, தமிழ்நாட்டைச் சார்ந்த தலைவர்களின் தியாகங்களை வருங்காலச் சந்ததியினரும் அறிந்துணர்ந்து பயன்பெறும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், சென்னை, கோயம்பேடு புறநகர பேருந்து நிலைய வளாகத்தில் 75வது சுதந்திரத் திருநாள் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக இந்திய விடுதலைப் போராட்ட தியாகிகளின் வீரப் பெருமிதங்களை நினைவுகூர்ந்து போற்றும் வகையில் “விடுதலைப் போரில் தமிழகம்” என்ற மாபெரும் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

அண்ணல் காந்தியடிகள், பண்டித ஜவகர்லால் நேரு, மகாகவி பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோரின் சிலைகள் இடம் பெற்று இக்கண்காட்சியைச் சிறப்பிக்கின்றன. ஏறத்தாழ இருபது முறை தமிழகத்திற்கு வருகைதந்து தமிழர்களை-தமிழகத்தை-தமிழ்மொழியை நேசித்த அண்ணல் காந்தியடிகளுக்கு விடுதலைப் போராட்ட வியூகங்களை வகுப்பதில் தமிழ்நாடு ஒரு முக்கிய களமாக விளங்கியதை வரலாறு போற்றிக் கொண்டுள்ளது. சீரிய அவ்வரலாற்று நிகழ்வுகள் பலவற்றை எடுத்துக் கூறும் அரிய புகைப்படங்கள், இந்திய விடுதலைப் போராட்டங்களின் பல்வேறு வரலாற்றுத் தொகுப்புகள், குறிப்பாக, உப்பு சத்தியாகிரகப் போராட்டம் சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு போன்றவைகள் குறித்த புகைப்படங்கள், சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றும் மக்களால் இதுவரை அறியப்படாத தியாகிகளின் புகைப்படங்கள் எனப் பலவும் இதில் இடம்பெற்றுள்ளன. 
இவைமட்டுமல்லாமல், செய்தி மக்கள் தொடர்புத் துறையால் பராமரிக்கப்படும் நினைவகங்கள் மற்றும் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய புகைப்படங்கள், சுதந்திர போராட்ட வீரர்களின் உருவம் பொரித்த பழைய நாணயங்கள், அஞ்சல் தலைகள் மற்றும் பட்டயங்கள் ஆகியவைகளும் இடம்பெற்றுள்ளன.

மேலும், பத்திரிகைத் தகவல் அலுவலகம் புத்தக நிலையம், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், பரிசல் புத்தக நிலையம் ஆகிய நிறுவனங்களின் பங்களிப்புகளும், தட்சிண சித்ரா குழுவினரால் அமைக்கப்பட்டுள்ள விடுதலைப் போராட்டம் பற்றிய அருமையான பழைய மண் பொம்மைகள், ஒலியோகிராப் படங்கள், மரத்திலான இராட்டை போன்றவைகள், தமிழ்நாடு அரசு ஆவண காப்பகத்தின் மூலம் கட்டபொம்மன் தூக்கிலிட்டது குறித்து கிழக்கிந்திய கம்பெனிக்கு பானர்மேன் கொடுத்த அறிக்கை, மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட விசாரணை ஆவணங்கள், ஆஷ்துரை கொலை வழக்கு பற்றிய ஆவணம், நீல் சிலை உடைப்பு குறித்த ஆவணம், வ.உ.சி. வழக்கு (திருநெல்வேலி சதி வழக்கு) ஆவணங்கள், செஞ்சிக் கோட்டை மற்றும் இதர கோட்டையின் நிலவரைகள், வேலூர் சிப்பாய் கலகம் பற்றிய வரலாற்று ஆவணங்கள் குறித்த புகைப்படங்களும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அரசு வழிகாட்டுதலின்படி கரோனா தடுப்பு முறைகளை பின்பற்றி, பள்ளி மாணவ மாணவியரும், பொதுமக்களும் இப்புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டுப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com