
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முத்த தலைவர் வே.துரைமாணிக்கம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முத்த தலைவர்களில் ஒருவருமான வே.துரைமாணிக்கம் (76) இன்று மதியம் 01.15 மணிக்கு சென்னை மருத்துவமனையில் காலமானார்.
ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் ஆம்பலாம் பட்டு தெற்கு கிராமத்தில் பிறந்த வே.துரைமாணிக்கம் சிறுவயதிலேயே கம்யூனிஸ்டு இயக்கம், விவசாயிகள் சங்கம் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியவர்.
இளம் வயதில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தில் இணைந்து செயல்பட்டு, அதன் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு உயர்ந்தவர்.
1969-70 ஆம் ஆண்டுகளில் வேலையின்மைக்கு எதிராக இளைஞர்களை திரட்டி போராடியவர். அப்போது மதுரை நகரில் நடந்த மாநில வேலையின்மை எதிர்ப்பு மாநாட்டில், கொடியேற்றி வைத்த சிறப்புக்குரியவர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவோணம் ஒன்றியச் செயலாளராக பொறுப்பேற்ற வே.துரைமாணிக்கம், மிகச்சிறப்பாக பணியாற்றியதைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட செயற்குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டார். கட்சி முடிவுப்படி விவசாயிகள் அரங்கில் வேலை செய்து, அதன் மாவட்டச் செயலாளர் பொறுப்பை ஏற்றார். இவர் மாவட்டச் செயலாளராக இருந்த நேரத்தில்தான் காவிரி நதிநீர் பகிர்வுப் போராட்டம் தீவிரமடைந்தது. 1989 ஜூன் 12 ஆம் தேதி தஞ்சாவூர் ராஜராஜ சோழன் சிலையில் இருந்து, வேதாரண்யம் ராஜாஜி சிலை வரை 150 கிலோ மீட்டர் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த மாபெரும் போரட்டத்தில் முக்கியப் பங்காற்றியவர் டாக்டர் வே.துரைமாணிக்கம்.
காவிரி நதி நீர் பகிர்வு தொடர்பான தரவுகளை திரட்டி, வலுவான வாதங்களை முன்வைத்து வந்தவர். இது தொடர்பாக சிறு நூல்களும் எழுதியுள்ளார்.
1989 - 90 களில் சமூக நீதி காவலர் வி.பி.சிங் தலைமையில் அமைந்த தேசிய அணி ஒன்றிய அரசும், தமிழ்நாட்டில் முத்தமிழறிஞர் தலைமையில் இருந்த திமுக அரசும் விவசாயிகளின் உணர்வை பிரதிபலித்து. காவிரி நதிநீர் பகிர்வு நடுவர் மன்றம் அமைத்தது. இதன் தலைவர் சித்ததோஷ் முகர்ஜியும் உறுப்பினர்களும் தமிழ்நாட்டின் கள ஆய்வுக்கும், விசாரணைக்கும் வந்த போது. விவசாயிகளை திரட்டி, ஆதாரப்பூர்வமான விபரங்களை ஆவணமாக்கி, விண்ணப்பங்களாக கொடுக்க முன் கையெடுத்து முனைப்புடன் செயலாற்றியவர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராக பணியாற்றிய எம்.ஆதிமுலம் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, மாநிலப் பொதுச் செயலாளர் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டு, இறுதிவரை செயல்பட்டவர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு நீண்ட காலம் பணியாற்றியவர். தற்போது மாநில நிர்வாகக் குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்து, செயல்படத் தொடங்கினார்.
விவசாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி கூர்ந்து கவனித்து, கோரிக்கைகளை முன்வைப்பதில் திறன் பெற்றவர். தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் விவசாய சங்கங்களோடும், அதன் தலைவர்களோடும் நெருங்கிய உறவில் இருந்து, அவர்களது நன் மதிப்பை பெற்றவர்.
டாக்டர் வே. துரைமாணிக்கம் மனைவி ராஜேஸ்வரியும் இவர்களுக்கு வாலண்டினா, சசிகலா என இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
சில நாள்களுக்கு முன்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் டாக்டர் வே.துரைமாணிக்கம் காலமானார்.
இவரின் உடல் இன்று பிற்பகல் 3 மணிமுதல் இரவு 7 மணிவரை பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை திநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மாநில தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இறுதி நிகழ்வானது, நாளை (நவ.3) மாலை 4 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், பாப்பாநாட்டில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.
வே.துரைமாணிக்கத்தின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்திய கம்யூ. மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் வெளியிட்ட செய்தியில்,
வே.துரைமாணிக்கத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் முறையில் தமிழ்நாடு முழுவதும் மூன்று நாள்களுக்கு கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, கட்சிக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிட்டப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.