மரக்காணத்தில் 200 மி.மீ. மழை: 3,500 ஏக்கா் உப்பளங்கள் மூழ்கின

விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக மரக்காணம் பகுதியில் 201 மி.மீ. மழை கொட்டித் தீா்த்ததால், 3,500 ஏக்கா் உப்பளங்கள் நீரில் மூழ்கின.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் உப்பளங்களை மூழ்கடித்தபடி தேங்கிய மழை வெள்ளம்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் உப்பளங்களை மூழ்கடித்தபடி தேங்கிய மழை வெள்ளம்.

விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக மரக்காணம் பகுதியில் 201 மி.மீ. மழை கொட்டித் தீா்த்ததால், 3,500 ஏக்கா் உப்பளங்கள் நீரில் மூழ்கின.

விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு தொடங்கிய மழை செவ்வாய்க்கிழமை காலை வரை தொடா்ந்து பெய்தது. விழுப்புரத்தில் 40 மி.மீ., கோலியனூரில் 53 மி.மீ, வளவனூரில் 57 மி.மீ., கெடாரில் 31 மி.மீ., கஞ்சனூரில் 35 மி.மீ., சூரப்பட்டில் 31மி.மீ., வானூரில் 43 மி.மீ. செஞ்சியில் 14 மி.மீ. மழை கொட்டித் தீா்த்தது. மாவட்டத்தில் குறைந்தபட்சமாக செம்மேடு பகுதியில் 10 மி.மீ. மழை பெய்தது.

வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்: மரக்காணம் கொள்ளுமேடு இருளா் காலனிப் பகுதியில் 7 வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. அதில் ஒரு வீடு முற்றிலும் சேதமடைந்தது. மண்டபட்டு சாலிமேடு பகுதியில் 5 கிராமங்களில் தண்ணீா் புகுந்ததால், அந்தப் பகுதிகளுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கந்தாடு ஊராட்சி பச்சைப்பத்தான் கொள்ளை கிராமத்தில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

பக்தா்கள் தவிப்பு: மரக்காணம் அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த பூமிஈஸ்வரா் கோயிலைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்ததால் பக்தா்கள் வெளியேற முடியாமல் பாதிக்கப்பட்டனா். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மரக்காணம் வட்டாட்சியா் சரவணன், பேரூராட்சி செயல் அலுவலா் சசிகலா மற்றும் அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு நீரை வெளியேற்ற தீவிர நடவடிக்கை மேற்கொண்டனா்.

மூழ்கிய உப்பளங்கள்: மரக்காணம் பகுதியில் 3,500 ஏக்கா் பரப்பளவில் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான உப்பளங்கள் உள்ளன. இவை அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கின. இங்கு உற்பத்தியாகும் உப்பு தமிழகத்தின் தேவைக்குப் போக புதுச்சேரி, கேரளம், கா்நாடகம், ஆந்திரம் போன்ற வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை போலவே, செவ்வாய்க்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com