துறையூர் அருகே வாய்க்கால் நீரில் அடித்துச் செல்லப்பட்ட கோயில் பூசாரி சாவு

மழைக்காலம் முன்பே ஏரிகளுக்கு இடையேயான வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்யாததால் துறையூர் அருகே இரண்டு ஏரிகளுக்கு இடையேயான வாய்க்காலில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கோயில் பூசாரி உயிரிழந்த ச
துறையூர் அருகே வாய்க்கால் நீரில் அடித்துச் செல்லப்பட்ட கோயில் பூசாரி சாவு
துறையூர் அருகே வாய்க்கால் நீரில் அடித்துச் செல்லப்பட்ட கோயில் பூசாரி சாவு

துறையூர்: மழைக்காலம் முன்பே ஏரிகளுக்கு இடையேயான வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்யாததால் துறையூர் அருகே இரண்டு ஏரிகளுக்கு இடையேயான வாய்க்காலில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கோயில் பூசாரி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துறையூர் பகுதியில் நிகழாண்டில் பெய்த மழையில் சேனப்பநல்லூர் ஏரிக்கு நீர் வரத்து ஏற்பட்டு அண்மையில் அந்த ஏரி நிரம்பி கடை வழிந்து தொடர்ந்து நீர் வெளியேறி வருகிறது. தீபாவளியன்று பெய்த மழையினால் இந்த ஏரியிலிருந்து வெளியேறிய நீரின் அளவும் ஊர்காட்டில் பெய்த மழைநீரும் அளவுக்கதிகமாக இருந்ததால் சேனப்பநல்லூர் ஏரியிலிருந்து வீரமச்சமான்பட்டி ஏரிக்கு செல்லும் வாய்க்காலில் அளவுக்கதிகமான நீர் சென்றது.

இந்த நிலையில் சேனப்பநல்லூர்  செல்லாண்டியம்மன் கோயில் பூசாரியான அதே ஊரைச் சேர்ந்த ராமசாமி மகன் ஹரிராஜ்(40) தீபாவளியன்று கோயில் பூசை முடித்து விட்டு வியாழக்கிழமை மாலை வீட்டுக்கு மிதிவண்டியில் சென்றார். வாய்க்கால் மீதுள்ள சிறு பாலத்தின் மீது அவர் செல்ல முயன்ற போது நீரோட்டம் அதிகமாக இருந்ததால் இறங்கி தள்ளிக் கொண்டு  சென்றாராம். அப்போது மிதிவண்டி வாய்க்கால் நீரில் அடித்துச் சென்றது. அப்போது அவருடன் சென்றவர்கள் நீர் வடிந்த பின் மிதிவண்டியை தேடி எடுத்துக் கொள்ளலாம் என்று கூறி அவரை வீட்டுக்கு அனுப்பினர். வீட்டுக்குச்  சென்றும் ஹரிராஜாவால் அமைதியாக இருக்க முடியவில்லை. ஆகையால் நீரில் அடித்துச் செல்லப்பட்ட மிதிவண்டியை மீட்க தனது 6 வயது மகனை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். மகனை கரையோரம் நிறுத்தி விட்டு ஹரிராஜ் வாய்க்காலில் இறங்கி மிதிவண்டியை தேடிய போது அவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

இதனை மகன் ஓடிச் சென்று தனது தாய் சங்கீதாவிடம் கூறிய போது அவர் கரையேறி திரும்பிவிடுவார் என்று நம்பி அவரது குடும்பத்தினர் அமைதியாக இருந்து விட்டனர். ஆனால் வெள்ளிக்கிழமை காலை வரை ஹரிராஜ் வீடு திரும்பாததால் குழப்பமும், அச்சமும் அடைந்த அவருடைய குடும்பத்தினர் ஊராட்சித் தலைவர் ராமதாஸிடம் தகவல் அளித்தனர். அவர் கிராம நிர்வாக அலுவலர்(பொ) கலிங்கமுடையான்பட்டி திருநாவுக்கரசு மற்றும் துறையூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தார்.

தகவலின் பேரில் துறையூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஆர். அறிவழகன் தலைமையில் பாலசந்தர் உள்ளிட்ட ஊழியர்கள் நேரில் சென்று காலை 8 மணி முதல் வாய்க்காலி்ல் தேடினர். வாய்க்கால் முழுதும் முட்செடிகளும், தேவையற்ற செடிகளும், குப்பைகளும் மண்டிக் கிடந்ததால் சுமார் நாலரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு மதியம் 12.30 மணியளவில் சேனப்பநல்லூர் ஏரியிலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் கல்லாண்டி வயலருகே ஹரிராஜின் சடலத்தை தீயணைப்புத் துறையினர் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

தகவலறிந்து துறையூர் காவலர்கள் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மழைக்காலம் தொடங்கும் முன்பு ஏரிகளுக்கு இடையேயான  வாய்க்காலை முறையாக தூர்வாரி சுத்தம் செய்திருந்தால் தண்ணீர் சீராக சென்றிருக்கும். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்காது. உயிரிழப்பும் ஏற்பட்டிருக்காது என்று அந்தப் பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். இதில் கோயில் பூசாரி உயிரிழந்ததால் அந்தப் பகுதி மக்களிடையே பரபரப்பும் சோகமும் ஏற்பட்டுள்ளது. 

ஹரிராஜ் தனது விதவைத் தாய், மனைவி சங்கீதா, இரண்டு மகள்கள், ஒரு மகன் ஆகியோரை தன்னுடன் வைத்து பராமரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஊராட்சி நிர்வாகமும், வருவாய் துறையினரும் இணைந்து ஹரிராஜின் குடும்பத்தினருக்கு அரசிடமிருந்து உரிய நிவாரணத்தொகையை பெற்றுத் தரவேண்டும் என்று  அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com