வாழப்பாடி பகுதியில் கொட்டித்தீர்த்த மழை: வீடுகள் இடிந்து சேதம்; மக்கள் அவதி

தீபாவளி தினமான வியாழக்கிழமை இரவு விடிய விடிய இடி மின்னலுடன் கன மழை பெய்தால், வீடுகள் இடிந்து சேதம் அடைந்தது. குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
வாழப்பாடியில் மழையில் இடிந்து தரைமட்டமான கூரை வீடு
வாழப்பாடியில் மழையில் இடிந்து தரைமட்டமான கூரை வீடு


வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் தீபாவளி தினமான வியாழக்கிழமை இரவு விடிய விடிய இடி மின்னலுடன் கன மழை பெய்தால், வீடுகள் இடிந்து சேதம் அடைந்தது. குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

வாழப்பாடி பகுதியில் கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.  இருப்பினும், பலத்த மழையில்லாததால், நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை. இதுமட்டுமின்றி, ஆறு, நீரோடைகளில் வெள்ளப்பெருக்கோ, ஏரி, குளம், தடுப்பணைகளுக்கு நீர்வரத்தோ ஏற்படவில்லை. 

கொட்டவாடி சாலையில் இடிந்து விழுந்த வீட்டுச்சுவர்.

பருவமழை தொடங்கிய நிலையில், கடந்தாண்டு போலவே நிகழாண்டும் பலத்த மழை பெய்யும் என்ற நம்பிக்கையில், மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருந்தனர். 

இந்நிலையில், வியாழக்கிழமை தீபாவளி தினத்தன்று இரவு முழுவதும் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.  விளைநிலங்களிலும், பள்ளமான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. வாழப்பாடியில் பேருந்து நிலையம் பின்புறம் கண்ணைய நாயுடு தெரு குடியிருப்பு பகுதியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

கண்ணையநாயுடு தெருவில் மழைநீர் சூழ்ந்த வீடுகள்.

இதில், ஒரு கூரைவீடு இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதனையடுத்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் பேரூராட்சி மற்றும் வருவாய் துறை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொட்டவாடி பிரதான சாலையில் பெருமாள் என்பவரது வீட்டு சுவரும் இடிந்து விழுந்தது.

மழையால் சேதமடைந்த வீடுகளை வாழப்பாடி வருவாய் ஆய்வாளர் கார்த்திக், கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பெற்றுக் கொடுப்பதற்கான அறிக்கை தயார் செய்து அனுப்பும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

மழைநீர் சூழ்ந்த வீடு

குடியிருப்பு பகுதியில் வீடுகளை  மழைநீர்  சூழ்ந்து தேங்காதவாறு,  வெள்ளம் வழிந்தோட, பேரூராட்சி மற்றும் வருவாய் துறையினர் வடிகால் ஏற்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஒரே இரவில் கொட்டித்தீர்த்த பலத்த மழையால், நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com