வீடு தேடி கரோனா தடுப்பூசி: மா. சுப்பிரமணியன் நேரில் ஆய்வு

தமிழக முதல்வரின் உத்தரவின்படி, வீடு தேடி கோவிட் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்
வீடு தேடி கரோனா தடுப்பூசி: மா. சுப்பிரமணியன் நேரில் ஆய்வு
வீடு தேடி கரோனா தடுப்பூசி: மா. சுப்பிரமணியன் நேரில் ஆய்வு

தமிழக முதல்வரின் உத்தரவின்படி, வீடு தேடி கோவிட் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளுக்கே சென்று கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணியினை இன்று (06.11.2021) பார்வையிட்டு  ஆய்வு செய்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின்படி, வீடு தேடி கோவிட் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  மா. சுப்பிரமணியன், தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட நொச்சிக் குப்பம், அடையாறு மண்டலத்திற்குட்பட்ட பெசன்ட் நகர் ஊரூர் குப்பம், பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட கொட்டிவாக்கம் குப்பம் மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலத்திற்குட்பட்ட நீலாங்கரை குப்பம் ஆகிய பகுதிகளில் வீடுகளுக்கே சென்று கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணியினை இன்று (06.11.2021) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது தெரிவித்ததாவது :

தமிழக முதல்வரின் உத்தரவின்படி, தமிழ்நாட்டில் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தும் வகையில் பல்வேறு நிலைகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே மருத்துவமனைகள், மருத்துவ அமைப்புகளின் வாயிலாக சுமார் 2800 இடங்களில் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. பிறகு பெரிய அளவிலான முறையில் தடுப்பூசிகள் செலுத்த வேண்டும் என்கின்ற நிலையில் வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் தொடங்கப்பட்டு, இதுவரை 7 மெகா தடுப்பூசி முகாம்கள் போடப்பட்டு மிகப்பெரிய அளவிலான வெற்றியை அடைந்திருக்கிறது.

கடந்த 2ம் தேதி செவ்வாய்க்கிழமை செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட மதுராந்தகம் அருகே நல்லாமூர் ஊராட்சி பகுதியில் உள்ள கிராமங்களில் வீடு தேடி நடமாடும் வாகனங்கள் மூலம் கோவிட் தடுப்பூசி போடும் பணி தமிழகத்தில் தொடங்கப்பட்டது. ஏற்கனவே பெருநகர சென்னை மாநகராட்சியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகள் தோறும் சென்று தடுப்பூசி போடும் பணியினை இந்தியாவிலேயே சென்னை மாநகராட்சியில் முதல்முறையாக தொடங்கப்பட்டது.

அதோடு மட்டுமல்லாமல் திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் வாகனங்கள் மூலம் கிராமங்கள் தோறும் சென்று தடுப்பூசி போடும் பணியினை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கினார். தடுப்பூசி போடும் பணியில் ஒருவரையும் கூட தவறவிட்டுவிடக் கூடாது என்கின்ற அளவில் வீடுகள் தோறும் சென்று தடுப்பூசிகள் போட வேண்டும் என்கின்ற முதல்வரின் வலியுறுத்தலுக்கு ஏற்ப கடந்த செவ்வாய்க்கிழமை நல்லாம்பாளையம் கிராமத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தும் வகையில் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட சுகாதார அலுவலர்கள் வீடுகள் தோறும் சென்று தடுப்பூசி போடும் பணியினை செயல்படுத்தி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் இதுவரை கோவேக்சின் தடுப்பூசி 2வது தவணை செலுத்ததாவர்கள் 14,07,903 நபர்களும், கோவிஷீல்டு 2வது தவணை 51,60,392 என மொத்தம் 65,70,295 நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளார்கள். அந்த வகையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் ஆணையாளர் அவர்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் லைவ் லிஸ்ட் தயாரித்து யாருக்கெல்லாம் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட வேண்டும் என பட்டியலை தயார் செய்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்த நொச்சி குப்பம் பகுதியில் உள்ள 536 வீடுகளில் 2956 நபர்கள் வசிக்கின்றனர். இதில் முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள் 771 நபர்கள், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 557 நபர்கள். தடுப்பூசி செலுத்தாத மீதமுள்ள நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் இன்று இந்தத் திட்டம் இங்கு தொடங்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் 10க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா தொற்று பாதிப்பானது அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் பெரிய அளவிலான அச்சுறுத்தல் தொடங்கியுள்ள சூழலில் தடுப்பூசி செலுத்திக்கொள்வது மிகவும் முக்கியம். இந்தச் சூழலில் நாம் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்கின்ற நிலையில் வீடுகள் தோறும் சென்று தடுப்பூசி செலுத்தும் வகையில் இந்தத் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்று மட்டுமில்லாமல் தினந்தோறும் வார நாட்களில் இந்தப் பணி தொடர்ந்து நடைபெறும்.

மேலும், நவம்பர் 14ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் முகாம்களில் 8- வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. எனவே இந்த மெகா தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கோவிட் தொற்று பாதிப்பிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து, அமைச்சர் மா. சுப்பிரமணியன் வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ் பெசன்ட் நகர் ஊரூர் குப்பத்தில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் பேட்டி அளித்த அவர், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த காரணத்தால் சேலத்தை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டது பெரிய அளவில் வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார். நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கூறிய அவர், பிரதமரை முதல்வர் சந்தித்த போதும், நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை 3 முறை சந்தித்த போதும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினோம். இதுவரை ஒன்றிய அரசு நீட் தேர்வு பிரச்சனையில் முழு தீர்வு காணவில்லை என்றார்.

தமிழகத்தில் 1,10,971 மாணவர்கள் நீட் தேர்வு எழுதி உள்ளனர். நீட் தேர்வு எழுதியவுடன் மாணவர்களின் மன உளைச்சலை போக்கும் வகையில் 333 மன நல மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வந்தவுடன் மீண்டும் கவுன்சிலிங் வழங்கப்பட்டது, இதுவரை 21,756 மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளது.

முதல் இரு முறை பேசிய போது 2 ஆயிரம் மாணவர்கள் மன அழுத்தத்தில் இருந்தது கண்டறியப்பட்டு மீண்டும் மீண்டும் கவுன்சிலிங் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் ஒரு மரணம் மன வருத்ததை அளிக்கிறது. மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கண்டிப்பாக இது மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

பெற்றோர்களே உங்கள் குழந்தைகளின் உயிருக்கு நீங்கள் தான் முழு உத்தரவாதம் அவர்களுக்கு அழுத்தம் தராமல் இருப்பது பெற்றோர்களின் கடமை. கவுன்சிலிங்கின் போது பெற்றோர்கள் அழுத்தம் கொடுப்பதாக 5 ஆயிரம் மாணவர்கள் கூறி இருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்றார். குழந்தைகளும் பெற்றோர்களை நினைத்து பார்த்து, வாழ்ந்து, சாதித்து காட்ட வேண்டும் என தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com