பேபி அணைக்கு கீழ் உள்ள 15 மரங்களை வெட்ட அனுமதி: கேரள முதல்வருக்கு நன்றி தெரிவித்து முதல்வா் ஸ்டாலின் கடிதம்

முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணைக்கு கீழே உள்ள பதினைந்து மரங்களை வெட்ட அனுமதி வழங்கியுள்ளதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்


முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணைக்கு கீழே உள்ள பதினைந்து மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத் துறை அனுமதி வழங்கியுள்ளதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். 

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

"அக்கடிதத்தில், முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணைக்கு கீழே உள்ள பதினைந்து மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத் துறை அனுமதி வழங்கியுள்ளது குறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் மூலம் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள முதல்வர், பேபி அணை மற்றும் மண் அணையை வலுப்படுத்த இந்த நீண்ட கால கோரிக்கை மிகவும் முக்கியமானது என்றும், இந்தக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க இந்த அனுமதி தங்களுக்கு உதவும் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அனுமதியை வழங்கியமைக்காக கேரள அரசுக்கும், கேரள முதல்வருக்கும், தமது அரசு சார்பிலும், தமிழகத்தின் தென் மாவட்ட மக்கள் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதல்வர்,  இது இரு மாநில மக்களுக்கும் நீண்ட காலத்திற்குப் பயனளிக்கும் வகையில் அமையும் என்றும், இரு மாநிலங்களுக்கிடையே உள்ள நல்லுறவு மேலும் வலுப்பட வழிவகுக்கும் என்றும் நம்புவதாக தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையை மேலும் வலுப்படுத்துவதற்கும், அணையின் கீழ்ப்பகுதியில் கேரளாவில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தமிழகத்தின் உறுதிப்பாட்டை தான் மீண்டும் வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், வண்டிப் பெரியாறு மற்றும் பெரியாறு அணைப் பகுதிக்கு இடையே உள்ள சாலையைச் சீரமைக்கவும், பொருட்களை எடுத்துச் செல்லவும் அனுமதி வழங்குமாறு, தமிழ்நாட்டின் சார்பில் வந்துள்ள முக்கியமான கோரிக்கைகளையும் விரைவுபடுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார். 

பழுதுபார்ப்பு மற்றும் வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளத் தேவையான பொருட்கள் மற்றும் இயந்திரங்களை எடுத்துச் செல்ல இந்தச் சாலைப் பணிகள் மிக அவசியம் என்று குறிப்பிட்டுள்ள அவர், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த மரங்கள் வெட்டுவதற்கான அனுமதியை வழங்கிய கேரள முதல்வருக்கும், கேரள அரசுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com