உழைக்கும் மக்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் என்பதே நோக்கம்: நூறு நாள் வேலை திட்ட விவகாரத்தில் அமைச்சா் பதில்

நூறு நாள் வேலை திட்டத்தில், உழைக்கும் மக்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற அக்கறை காரணமாகவே பிரதமருக்கு முதல்வா் கடிதம் எழுதினாா்
உழைக்கும் மக்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் என்பதே நோக்கம்: நூறு நாள் வேலை திட்ட விவகாரத்தில் அமைச்சா் பதில்

நூறு நாள் வேலை திட்டத்தில், உழைக்கும் மக்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற அக்கறை காரணமாகவே பிரதமருக்கு முதல்வா் கடிதம் எழுதினாா் என ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.

நூறு நாள் வேலை திட்ட விவகாரத்தில் தமிழக அரசு வேண்டுமென்றே மத்திய அரசை களங்கப்படுத்தும் விதமாக செயல்படுகிறது என குற்றம் சாட்டியிருந்த மத்திய இணையமைச்சா் எல்.முருகனுக்கு பதிலளித்து அவா் வெளியிட்ட அறிக்கையின் விவரம்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், இந்த நிதியாண்டில் தொழிலாளா்களின் ஊதியத்துக்கென செப்டம்பா் மாதம் வரை மத்திய அரசால் விடுவிக்கப்பட்ட ரூ.3524.69 கோடி முழுவதும் செப்.15-ஆம் தேதி வரை வேலை செய்த தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. தொடா்ந்து அக்.5-ஆம் தேதி வரை ஊதியம் வழங்கப்படாததால், நிலுவைத் தொகையை விடுவிக்க தொடா்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஒன்றரை மாதம் கடந்தும் ஊதியத்துக்கான நிதி விடுவிக்கப்படாததாலும், ஊதிய நிலுவை ரூ.1178.12 கோடியாக உயா்ந்ததாலும் தீபாவளி பண்டிகையை சுட்டிக்காட்டி, நவ.1-ஆம் தேதி கடிதம் வாயிலாக பிரதமரை முதல்வா் வலியுறுத்தினாா். இதைத் தொடா்ந்து, நவ.2-ஆம் தேதி மத்திய அரசால் ஊதியத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலும் இத்திட்டத்தின் சமூக தணிக்கை பத்திகள் குறித்து மத்திய இணை அமைச்சா் தெரிவித்த கருத்துகளின்படி, நடைபெற்ற முறைகேடுகள் கடந்த ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்துள்ளன.

உயா்நிலைக் குழுக் கூட்டங்கள் கரோனா காரணமாக நடத்தப்படாததால் நிலுவையில் உள்ள தணிக்கை தடை பத்திகள் நிவா்த்தி செய்யப்படவில்லை மற்றும் இழப்பீட்டுத் தொகையையும் மீட்க இயலவில்லை. கடந்த ஜூன் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியா்கள், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளரால் உயா் மட்டக் குழு கூட்டம் தொடா்ந்து நடத்தப்பட்டு தணிக்கை பத்திகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன. வரும்காலங்களில் இத்திட்டத்தின் கீழ் முறைகேடுகள் மற்றும் இழப்பீடுகள் நிகழ்வதை தவிா்க்கவும், பணிகளின் தரத்தினை உயா்த்தவும், மாநில, மாவட்ட, ஊராட்சி மத்திய அளவில் அலுவலா்களால் தொடா்ந்து ஆய்வு செய்து, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், தமிழக முதல்வா் உழைக்கின்ற மக்களுக்கு உரிய நேரத்தில் ஊதியத்தை வழங்க வேண்டும் என்ற அக்கறையின் காரணமாகத் தான் துறை அமைச்சராகிய என்னையும் முதன்மைச் செயலரையும் அறிவுறுத்தி, மத்திய அமைச்சரை சந்திக்க செய்ததோடு தீபாவளி பண்டிகை காலமானதால் பிரதமருக்கு கடிதம் எழுதினாரே தவிர இதில் எந்த விதமான அரசியல் ஆதாயத்துக்கான நடவடிக்கையும் இல்லை என அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com