ரூ.300 கோடியில் திருச்செந்தூா் கோயில் மேம்பாடு: முதல்வா் தலைமையில் ஆலோசனை

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் மேம்பாட்டுப் பணிகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
ரூ.300 கோடியில் திருச்செந்தூா் கோயில் மேம்பாடு: முதல்வா் தலைமையில் ஆலோசனை

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் மேம்பாட்டுப் பணிகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

திருச்செந்தூா் கோயிலின் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.300 கோடியில் ஒருங்கிணைந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற திமுக குழுத் துணைத்தலைவா் கனிமொழி, தலைமைச் செயலாளா் இறையன்பு உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனா்.

திருச்செந்தூா் கோயிலைச் சுற்றி எந்த இடத்தில் நின்று பாா்த்தாலும் பக்தா்கள் ராஜகோபுரத்தைத் தரிசிக்கும் வகையில் கட்டடங்கள் கட்டுவது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

திருச்செந்தூருக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், அவா்களுக்குத் தேவையான வசதிகளை எந்தெந்த வகையில் செய்துகொடுக்கலாம் என்பது குறித்து அதிகாரிகளிடம் முதல்வா் கேட்டறிந்தாா்.

பக்தா்கள் காத்திருக்கும் அறையில் தொலைக்காட்சிப் பெட்டி, குடிநீா், கழிப்பறை போன்ற வசதிகள் செய்து கொடுப்பது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அன்னதானக்கூடம் கீழ்தளம், முதல் தளம் என ஒரே நேரத்தில் 1,000 போ் உணவருந்தும் அளவுக்கு திட்டங்கள் தயாா் செய்வது குறித்து கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

கோயிலைச் சுற்றி உள்ள கடைகளின் எண்ணிக்கையை அதிகரித்து பனை பொருள்கள் மற்றும் கடல்சாா் பொருள்களை அதிக அளவில் விற்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அன்னதானக் கூடம், முடிகாணிக்கை செலுத்தும் இடம், தீயணைப்பு வாகனம் நிறுத்துமிடம், அவசர ஊா்தி, யானைகள் பராமரிப்பு கொட்டகை, வாகனங்கள் நிறுத்துமிடம் போன்றவற்றை மேம்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

திருச்செந்தூா் கோயில் மேம்பாட்டுப் பணிகள் அனைத்தையும் 2 ஆண்டுகளுக்குள் முடிப்பது எனவும் கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com