பள்ளிகளை மூடக் கூடாது: மதுரை அறிவியல் இயக்க மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 14வது மாவட்ட மாநாட்டில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் பேசுகிறார் தினகரன்...
மாநாட்டில் பேசுகிறார் தினகரன்...

மதுரை மாநகராட்சி நடத்திவரும் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையைக் காரணம் காட்டிப் பள்ளிகளை மூடுவதையும் அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைப்பதையும் கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

மதுரையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 14-வது மாவட்ட மாநாடு நவ. 7-ல் நடைபெற்றது. மாநாட்டின் தொடக்க விழாவில் சேர்மத்தாய் வாசன் கல்லூரிப் பேராசிரியர் எம். கவிதா தலைமை வகித்துப் பேசினார்.

நாடார் வித்யாசாலை நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் காந்திபாய் முன்னிலை வகித்தார். கிளைச் செயலர் சி. இந்திரா வரவேற்புரை வழங்கினார்.

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி முனைவர் என். சிவசுப்ரமணியம் துவக்க உரையாற்றும்போது, அறிவியலும் தொழில்நுட்பமும் இணைந்து பாய்ச்சல் வேகத்தில் செல்கிறது என்றும் தற்போது பயன்படுத்தப்படும் வைஃபி முறை விரைவில் லைஃபி என்ற ஒளி வேகத்தில் செல்லும் தகவல் தொழில்நுட்பம் வரவிருக்கிறது என்றும் நியூட்ரினோ போன்ற புதுமை ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

மேலும், செயற்கை நுண்ணறிவு அசுர வளர்ச்சி பெற்று வருகிறதென்றும் இதன் மூலம் மருத்துவத் துறையில் மனிதர்களின் விபத்து, திடீர் மரண நோய்கள் விஷயத்தில் இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் ஏற்கெனவே பதிவு செயப்பட்ட தரவுகள் மூலம் விரைவில் சிகிச்சை செய்து காப்பாறற முடியும் எனத் தெரிவித்தார்.

மாநிலத் தலைவர் முனைவர் தினகரன் பேசும்போது, காடுகள் பாதுகாப்பு திருத்தச் சட்டம் தற்போது உயர்ந்து வரும் புவி வெப்பமயமாதலுக்கு எதிரானது என்றும் பருவ காலக் கொள்கைகளுக்கு முரணானது எனப் பேசினார்.

எஸ்விஎஸ் உணவு நிறுவனத்தின் இயக்குனர் எஸ்.வி. சூரஜ் சுந்தர் சங்கர் வாழ்த்துரை வழங்கினார்.

இதை தொடர்ந்து, அகில இந்திய அறிவியல் இயக்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேரா.இராஜமாணிக்கம் பேசுகையில், தேசிய கல்விக் கொள்கை 2020ஐ தமிழ்நாடு அரசு நிராகரித்ததற்குப் பாராட்டுகளைத் தெரிவித்து அரசு, தனியார் பல்கலைக்கழகங்களில் யுஜிசி மூலம் நேரடியாக இக் கொள்கையை அமல்படுத்துவதைக் கண்காணித்து தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மாநாட்டில் பள்ளிகளை மூடக் கூடாது என்பது உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் விவரம்:

  • மதுரை மாவட்டத்தில் உள்ள ஈரநிலங்கள், ஏந்தல்கள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் அனைத்தும் பாதுகாத்துப் பராமரிக்கப்பட வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நவீனமயமாக்கல் என்ற பெயரில் நகரில் மிஞ்சியுள்ள நீர்நிலைகளை அழித்துவிடாமல் அரசு கவனமுடன் பாதுகாக்க வேண்டும்.
  • ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வி முடிய அனைவருக்கும் இலவசமாகக் கல்வியை அரசு உறுதி செய்துள்ள நிலையில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்தக் கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப் பட்டிருக்கிறது என அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. இவ்வாறு கூடுதலாக வசூல் செய்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • மதுரை மாவட்ட மக்களின் நீண்ட கனவான எய்ம்ஸ் மருத்துவமனையைத் துரிதமாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
  • மதுரை மாவட்டத்தின் ஆரம்ப சுகாதார, தாலுகா, மாவட்ட கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். ஆரம்ப சுகாதார, தாலுகா மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவர்கள், உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வதைத் தவிர்த்து நிரந்தரமான பணி நியமனம் செய்ய வேண்டும்.
  • மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் சாலைகளை விரிவாக்கம் செய்யும் போது ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதனை ஈடு செய்யும் வகையிலும் மாநகரின் சூழல் மண்டல மேம்பட்டிற்காக மதுரை மாநகரில் உள்ள அனைத்துப் பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் மரங்களை நட்டுப் பாதுகாக்க வேண்டும்.
  • கல்வியில் சிறந்து விளங்கும் மதுரை மாவட்டத்தில் பள்ளி /கல்லூரி மாணவர்களின் அறிவியல் சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில் நவீன கோளரங்கமும், அறிவியல் மையம் அமைக்கப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை அரசு ஏற்று நவீன அறிவியல் மையத்தை அமைக்க வேண்டும்.
  • காலநிலை மாற்றத்தின் காரணமாக எதிர்வரும் காலங்களில் மதுரை மாவட்டத்தில் பெரும் பாதிப்பு ஏற்படப்போவதாக மாவட்ட ஆட்சியர் சுட்டிக்காட்டியுள்ளார். இதைக் கவனத்தில் கொண்டு அதற்குரிய விழிப்புணர்வு மற்றும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சிறப்பு ஆய்வு மற்றும் விழிப்புணர்வுத் துறை உருவாக்கப்பட வேண்டும்.
  • தேசிய கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியான கற்போம் எழுதுவோம் திட்டத்தை அறிவாளி இயக்கம் போன்று மக்கள் இயக்கமாக மாற்றி செயல்படுத்த வேண்டும்.

மாநாட்டின் நிறைவாக அலுவலகச் செயலர் காமேஷ் நன்றி கூறினார்.எதிர்வரும் இரண்டு வருடத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்டத் தலைவராக பேரா. எம். ராஜேஷ், செயலாளராக கு. மலர்ச்செல்வி பொருளாளராக சிவராமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com