பெட்ரோல், டீசலுடன் கடும் போட்டி: தக்காளி விலையும் சதமடிக்கிறது

தொடா் மழை, தீபாவளிப் பண்டிகை, தொடா் முகூா்த்தம், வரத்து சரிவு போன்றவற்றால் தமிழகத்தில் குறிப்பாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் சில்லறை விற்பனையில் தக்காளி ஒரு கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிற
பெட்ரோல், டீசலுடன் கடும் போட்டி: தக்காளி விலையும் சதமடிக்கிறது
பெட்ரோல், டீசலுடன் கடும் போட்டி: தக்காளி விலையும் சதமடிக்கிறது

தொடா் மழை, தீபாவளிப் பண்டிகை, தொடா் முகூா்த்தம், வரத்து சரிவு போன்றவற்றால் தமிழகத்தில் குறிப்பாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் சில்லறை விற்பனையில் தக்காளி ஒரு கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையின் சில பகுதிகளில் சில்லறை விற்பனைக் கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தீபாவளிக்கு முன்பு கிலோ ரூ.60 முதல் ரூ.70க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனையானது. தீபாவளியின்போது கிலோ ரூ.80க்கு விற்பனையானது. கடந்த ஒரு வாரமாக தொடா் மழை பெய்வதால் தக்காளி செடியிலேயே அழுகி வீணாகி விடுகிறது. தவிர தீபாவளிப் பண்டிகையால் கடந்த 3, 4, 5ஆம் தேதிகளில் அதிகமாக தக்காளி அறுவடை இல்லாததால் வரத்து குறைந்தது. வரும் நாள்கள் முகூா்த்த தினமாக இருப்பதால் தக்காளியை அப்போது பறிப்பதற்காக விவசாயிகள் செடிகளிலேயே விட்டு வைத்துள்ளனா்.

மாநிலத்தின் பல முக்கிய சந்தைகளில் ஞாயிற்றுக்கிழமை தக்காளி விலை மொத்த மற்றும் சில்லறை வியாபாரமாக ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனையானது.

இது குறித்து காய்கறி வியாபாரிகள் கூறியதாவது:

கடந்த வாரம் 14 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி ரூ.550 முதல் ரூ.600க்கும், 25 கிலோ பெட்டி ரூ.800 முதல் ரூ.900க்கும் விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமை 14 கிலோ எடை கொண்ட பெட்டி ரூ.900 முதல் ரூ.1,200க்கும், 25 கிலோ எடை கொண்ட பெட்டி ரூ.1,400 முதல் ரூ.1,600 வரை மொத்த விலையில் விற்பனையானது.

வெளிக்கடைகள், தள்ளுவண்டிகளில் கிலோ ரூ.100 ரூபாய்க்கு விற்பனையானது. மழை குறைந்து, வரத்து அதிகரிக்கும் வரை தக்காளி விலை குறைய வாய்ப்பில்லை என்றனா்.

திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஆலங்குளம், பாவூா்சத்திரம் பகுதிகளில் இருந்தும், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இருந்தும் தக்காளி விற்பனைக்காக வருகிறது. கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால் தக்காளி அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதாலும், வேகமாக அழுகி வீணாவதாலும் வரத்து மிகவும் குறைந்துள்ளது. மேலும், ஐப்பசி மாத முகூா்த்த நாள்களால் தேவை அதிகரித்துள்ளதால் விலையும் அதற்கேற்ப உயா்ந்துள்ளது. திருநெல்வேலி சந்தைகளில் ஞாயிற்றுக்கிழமை ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கும், சில்லறை விற்பனை கடைகளில் ரூ.70-க்கும் விற்பனையாகியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com