புதுச்சேரியில் தொடரும் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் தொடரும் கனமழை
புதுச்சேரியில் தொடரும் கனமழை

புதுச்சேரி:  புதுச்சேரியில் பெய்து வரும் கன மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் தொடர் மழை பெய்து வருகிறது.

புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தொடங்கிய மழை தொடர்ந்து இரவும், அதிகாலை வரையும் தொடர்ச்சியாக பெய்தது.
 மீண்டும் தொடர்ந்து திங்கள் கிழமை காலை முதல் பரவலாக கனமழையாக கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் புதுச்சேரியில் சாலைகளில் மழை நீர் வழிந்தோடி வருகிறது.

புதுச்சேரியில் திங்கள்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி பதிவான மழையளவு:  புதுச்சேரி 82.10 மில்லிமீட்டர், திருக்கனூர் 70 மில்லிமீட்டர், பத்துக்கண்ணுவில் 68 மில்லிமீட்டர், பாகூரில்40 மில்லி மீட்டர் மழை அளவு பதிவானது.

திங்கள்கிழமை காலை முதல் தொடர்ச்சியாக கன மழை கொட்டி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு புதுவை அரசு விடுமுறை அளித்துள்ளது.

புதுச்சேரியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கும், கல்லூரிகளுக்கும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை இரு தினங்கள் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளன.
மேலும் திங்கள் கிழமை முதல் தொடங்கவிருந்த  1ஆம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.  இதனால் புதுவை மாநிலத்தில் இருதினங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளன.

 சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை...
தொடர் மழை காரணமாக வீடூர் அணை நிரம்பி தண்ணீர் திறந்து  விடப்பட்டுள்ளதால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகள் நிரம்பி வழிவதால் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மணலி பட்டு, செட்டி பட்டு, கைக்கிளபட்டு, வம்பு பட்டு வில்லியனூர் வழியாக செல்லும் சங்கராபரணி ஆற்றில் பொதுமக்கள் இறங்க வேண்டாம், அருகே செல்ல வேண்டாம் என போலீசார் மற்றும் வருவாய் துறையினர் கிராமப்பகுதிகளில் தண்டோரா மூலமும் ஒலிபெருக்கி வாயிலாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

புதுச்சேரி தொடர் மழை காரணமாக பெரும்பாலான சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகனங்கள் செல்வதற்கும், பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com