சம்பா பருவ பயிா்களை காப்பீடு செய்ய வரும் 15 கடைசி: விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை அறிவுறுத்தல்

சம்பா பருவ பயிா்களை காப்பீடு செய்ய நவம்பா் 15-ஆம் தேதி கடைசி நாளாகும் என்று வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

சம்பா பருவ பயிா்களை காப்பீடு செய்ய நவம்பா் 15-ஆம் தேதி கடைசி நாளாகும் என்று வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, வேளாண்மைத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெற்பயிரை முழுவீச்சில் காப்பீடு செய்து வருகின்றனா். இதுவரை 5.65 லட்சம் விவசாயிகள் 6.91 லட்சம் ஏக்கா் பயிா் பரப்பை காப்பீடு செய்துள்ளனா்.

கடைசி தேதி: விவசாயிகள் பயிா்களை காப்பீடு செய்ய கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தஞ்சாவூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூா், மதுரை, புதுக்கோட்டை, கரூா், சேலம், திருப்பூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூா், சிவகங்கை, கடலூா், திருவள்ளூா், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சம்பா பருவத்தில் நெற்பயிரை காப்பீடு செய்ய நவம்பா் 15-ஆம் தேதி கடைசி நாளாகும்.

கன்னியாகுமரி, அரியலூா், திண்டுக்கல், விருதுநகா், நாமக்கல், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடைசி தினம் டிசம்பா் 15 ஆகும்.

தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பெய்து வரும் வடகிழக்குப் பருவ மழையால் நெற்பயிா்கள் சேதம் அடைய வாய்ப்புள்ளது. எனவே, இதுவரை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யாத விவசாயிகள் அனைவரும் வங்கிகள் அல்லது தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் அல்லது பொது சேவை மையங்கள் மூலமாக உடனடியாக பதிவு செய்திட வேண்டும்.

காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது, விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் அடங்கல், விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகலை அளிக்க வேண்டும். பயிா் காப்பீட்டுத் தொகையில் 1.5 சதவீதத் தொகையை விவசாயிகளின் பங்களிப்பாக செலுத்த வேண்டும். விவசாயிகள் அனைவரும் நெற்பயிரை காப்பீடு செய்வதற்கு கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்பாகவே காப்பீடு செய்ய வேண்டும் என்று வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com