டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: முறைகேடு உறுதி செய்த பிறகும் தேர்வை ரத்து செய்யாதது ஏன்?: உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில், முறைகேடு உறுதி செய்த பிறகும், தேர்வை ரத்து செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கின் தீர்ப்பு
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: முறைகேடு உறுதி செய்த பிறகும் தேர்வை ரத்து செய்யாதது ஏன்?: உயர்நீதிமன்றம் கேள்வி


மதுரை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில், முறைகேடு உறுதி செய்த பிறகும், தேர்வை ரத்து செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கின் தீர்ப்பு தேதியைக் குறிப்பிடாமல் ஒத்திவைத்து புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 2019 -இல் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில், ராமேசுவரம் மையத்தில் தேர்வு எழுதியவர்கள் முதல் நூறு இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வழக்கு விசாரணை சரிவர நடைபெறாததால், சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த முகமதுரஷ்வி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, 2016 முதல் 2019 வரை அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய கிராம நிர்வாக அலுவலர், குரூப் 2, குரூப் 4 தேர்வுகளில் நடந்த முறைகேடு தொடர்பாக 194 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், தேர்வு முறைகேடு தொடர்பாக கீழ்மட்ட ஊழியர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் கீழக்கரை மற்றும் ராமேசுவரம்  தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பியபோது, அரசு தரப்பில் தேர்வு ரத்து செய்யப்படவில்லை என பதிலளிக்கப்பட்டது.

தொடர்ந்து நீதிபதிகள், தேர்தலில், ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவில் முறைகேடு நடக்குபோது, அந்த வாக்குச்சாவடிக்கு மட்டும் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும்போது, தேர்வு மையங்களில் முறைகேடு நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்ட பிறகும் தேர்வு ரத்து செய்யப்படாது ஏன்? எனக் கேள்வி எழுப்பினர்.
டின்என்பிஎஸ்சி தரப்பில் தேர்வு எழுதிய பின்னர், விடைத்தாள்களைக் கொண்டு செல்லும் வழியில் முறைகேடு நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு நீதிபதிகள், ஏடிஎம் மையங்களுக்கு பணம் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படுகையில், பல லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய விடைத்தாள்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்காதது ஏன்? எனக் கேள்வி எழுப்பினர்.

பின்னர் நீதிபதிகள், இது மிகப் பெரும் மோசடி என்பதால், டிஎன்பிஎஸ்சி மீது மக்கள் இழந்த நம்பிக்கையை சரிசெய்யும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கூறி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com