நீடிக்கும் கனமழையால் நிறைவடையாத சம்பா, தாளடி நடவுப் பணிகள்!

காவிரி கடைமடை மாவட்டங்களில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக நீடிக்கும் பலத்த மழையால் சம்பா, தாளடி நடவுப் பணிகள் தடைபட்டுள்ளன.
நாகை மாவட்டம், கோபுராஜபுரத்தில் வெள்ளத்தில் மிதக்கும்  பறிக்கப்பட்ட நெல் நாற்றுகள். 
நாகை மாவட்டம், கோபுராஜபுரத்தில் வெள்ளத்தில் மிதக்கும்  பறிக்கப்பட்ட நெல் நாற்றுகள். 


நாகப்பட்டினம்: காவிரி கடைமடை மாவட்டங்களில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக நீடிக்கும் பலத்த மழையால் சம்பா, தாளடி நடவுப் பணிகள் தடைபட்டுள்ளன. எனவே, முழுமையான பரப்பும் பயிர்க் காப்பீட்டில் பயனடையும் வகையில், சம்பா, தாளடி நெல் பயிர்களுக்கான பயிர்க் காப்பீட்டுத் திட்ட கால அவகாசத்தை அரசு நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர் டெல்டா விவசாயிகள்.
நாகை மாவட்டத்தில் சுமார் 5,000 ஹெக்டேரிலும், திருவாரூர் மாவட்டத்தில் 16 ,000 ஹெக்டேரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 500 ஹெக்டேரிலும் சம்பா, தாளடி நெல் நடவுப் பணிகள் நடைபெறாமல் உள்ளன. இந்த நிலையில், வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக, கடந்த அக்டோபர் 28- ஆம் தேதி முதல் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பலத்த மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், எஞ்சியுள்ள பரப்பிலான தாளடி நெல் நடவுப் பணிகள் தடைபட்டிருப்பதுடன், நடவு செய்யப்பட்ட நெல் பயிர்களின் நிலையும் மோசமாகியுள்ளது.
நாகை மாவட்டத்தில் நடவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள 60,050 ஹெக்டேரில், 41,000 ஹெக்டேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 67,800 ஹெக்டேரில், 30 ஆயிரம் ஹெக்டேருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 1.31 லட்சம் ஹெக்டேரில், 57,000 ஹெக்டேருக்கும் மட்டுமே நவம்பர் 10 ஆம் தேதி வரை பயிர்க் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர்க் காப்பீடு பெற விரும்பும் விவசாயிகள், நடவு செய்யப்பட்ட நெல் வயலின் பட்டா, சிட்டா போன்ற விவரங்களை சமர்ப்பித்து நவம்பர் 15 -ஆம் தேதிக்குள் பிரீமியம் செலுத்த வேண்டும்.
விளை நிலங்களைச் சூழ்ந்துள்ள வெள்ள நீரை வடியச் செய்வதே விவசாயிகளுக்கு மிகப் பெரும் சவாலாக உள்ள நிலையில், எஞ்சியுள்ள பரப்பில் 4 நாள்களுக்குள் நடவுப் பணிகளை மேற்கொள்வதும், அதற்கு காப்பீடு பெறுவதும் சாத்தியமற்றதாக உள்ளது. 
எனவே, காவிரி கடைமடை மாவட்டங்களின் நிகழ்ப் பருவ நெல் பயிர்களுக்கான பயிர்க் காப்பீட்டை நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com