
முதல் உலகப் போர் நினைவு நாளையொட்டி காரைக்காலில் பிரெஞ்சு போர் வீரர் சிலைக்கு மரியாதை செலுத்திய புதுச்சேரி துணை தூதர், ஆட்சியர் உள்ளிட்டோர்.
காரைக்கால்: காரைக்காலில் முதல் உலகப் போர் நினைவு நாளையொட்டி பிரெஞ்சு போர் வீரர் சிலைக்கு புதுச்சேரி துணை தூதர் உள்ளிட்டோர் வியாழக்கிழமை மரியாதை செலுத்தினர்.
முதல் உலகப் போர் முடிந்து 103-ஆவது ஆண்டு நினைவையொட்டி காரைக்காலில் உள்ள ஓய்வுபெற்ற பிரெஞ்சு ராணுவ வீரர்கள் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியரகம் அருகே பிரெஞ்சு போர் வீரர் சிலையுடன் உள்ள நினைவுத் தூணுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையும் படிக்க | புதுச்சேரியில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
புதுச்சேரிக்கான பிரெஞ்சு கவுன்சில் தூதர் லிசே பரே தல்போ சிறப்புப் பிரதிநிதியாக கலந்துகொண்டார். மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) எஸ்.பாஸ்கரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர்.
போர் நினைவுத் தூண் பகுதிக்கு ராணுவ வீரர்கள் சங்கப் பிரதிநிதிகள் பிரெஞ்சுக் கொடியுடன் வந்தனர். புதுச்சேரி பிரெஞ்சு தூதர் நினைவுத் தூணுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து ஆட்சியர் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்தனர்.
இதையும் படிக்க | சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை
முன்னதாக நினைவுத் தூண் அருகே நிறுவப்பட்டிருந்த இரு கம்பங்களில் இந்திய, பிரெஞ்சு தேசியக் கொடி ஏற்றப்பட்டன. நிகழ்ச்சியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.