
திருவள்ளூர்: திருவள்ளூர் பகுதியில் விடிய, விடிய பெய்த அடைமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது, இதில் சோழவரத்தில் 220 மி.மீ அதிக பட்சமாகவும், ஆர்.கே.பேட்டையில் 31 மி.மீ குறைந்தளவு பதிவாகியுள்ளது.
தற்போதைய நிலையில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாள்களாக விடாமல் பெய்து வருகிறது. அதிலும் வியாழக்கிழமை வானிலை ஆய்வு மையம் வரலாறு காணாத அளவில் மழை பெய்யும் என அறிவித்திருந்தது. அதனால் அதை மாவட்ட நிர்வாகம் எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயாராகவே உள்ளது. இந்த நிலையில் புதன்கிழமை மாலை தொடங்கி, வியாழக்கிழமை காலை வரையில் மழை பெய்தது. இதேபோல், இப்பகுதியில் உள்ள திருவள்ளூர், வெள்ளியூர், தாமரைபாக்கம், பூண்டி, திருத்தணி, சோழவரம், திருத்தணி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி உள்ளிட்ட வட்டார பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்தது. இந்த மழையால் நகராட்சி சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் குளம் போல் தேங்கியது.
இதையும் படிக்க | 'காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே இன்று மாலை கரையை கடக்கும்'
இதில் திருவள்ளூர் அருகே சிறுவனூர் ஜெ.ஜெ.நகர் குடியிருப்பு பகுதியில் சரியான கால்வாய் வசதிகள் இல்லாததால் மழை நீர் குளம் போல் தேங்கியது. இதனால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் விஷப்பூச்சிகள் உள்ளே புகும் நிலையும் உருவாகியுள்ளதால் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் மோட்டார் மூலம் அகற்றவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
இதையும் படிக்க | மேட்டூர் அணை நீர்மட்டம் மூன்றாவது நாளாக 119 அடியாக நீடிப்பு
மழை அளவு விவரம்: திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை அளவு விவரம் மி.மீட்டரில் வருமாறு: சோழவரம்-220, கும்மிடிப்பூண்டி-184, செங்குன்றம்-180, தமரைபாக்கம்-149, பொன்னேரி-125, பூந்தமல்லி-115, திருவள்ளூர்-99, ஊத்துக்கோட்டை-96, ஜமீன்கொரட்டூர்-92, பூண்டி-86, திருவலாங்காடு-65, பள்ளிப்பட்டு-58, திருத்தணி-36, ஆர்.கே.பேட்டை-31 என மொத்தம்-1536 மி.மீட்டரும், சராசரியாக-109.71 மி.மீட்டரும் பதிவாகியுள்ளது. இதற்கிடையே அதிகளவு மழை பெய்துள்ளததால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.